17.உள்ளாட்சித்தேர்தல் சில சுவையான செய்திகள்
1) ஒரு ஓட்டு கூட வாங்காத அ.தி.மு.க. வேட்பாளர்
அனந்தபுரம் பேரூராட்சி வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. இதில் 6வது வார்டில் திமுக வேட்பாளர் சேகர் 144 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை அடுத்து சுயேச்சை வேட்பாளர் விக்டோரியா பாய் 131 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் அதிமுக வேட்பாளர் ஜோதி ஒரு வாக்கு கூட பெறவில்லை. அவர் போட்ட ஓட்டு கூட செல்லாத ஓட்டாகி விட்டது. ஓட்டு எண்ணிக்கைக்கு வந்திருந்த வேட்பாளர் ஜோதி தனக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லையே. தான் போட்ட ஓட்டு கூட கிடைக்கவில்லையே, அது என்ன ஆயிற்று என்ற சோகத்தில் இருந்தார்.
2) பஞ்சாயத்து தலைவர் தேர்தல் இறந்த பெண்ணுக்கு கிடைத்தது வெற்றி
முடிவு நிறுத்திவைப்பு
பஞ்சாயத்து தலைவர் தேர்தலில், இறந்த பெண் வேட்பாளர் வெற்றி பெற்றார். இதனால் அங்கு தேர்தல் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், மீரான்குளத்தைச் சேர்ந்தவர் சாது சுந்தர் சிங். இவருடைய மனைவி ஹெலன் ஜெசீலா (26). அ.தி.மு.க.வை சேர்ந்த சாது சுந்தர் சிங், மீரான்குளம் பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்து வந்தார். இந்த முறை இது பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால், தனது மனைவி ஹெலன் ஜெசீலாவை கட்டாயப்படுத்தி போட்டியிடச் செய்தார். இதற்கிடையே, விபத்தில் சிக்கி காயமடைந்ததாக ஜெசீலாவை சாது சுந்தர் சிங் மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், தேர்தலில் போட்டியிட மறுத்ததால், சாது சுந்தர் சிங் அவரை கடுமையாக தாக்கியதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில், அக்டோபர் 1ம் தேதி ஹெலன் உயிரிழந்தார்.
உள்ளாட்சி தேர்தல் வேட்புமனுக்களை வாபஸ் பெற செப்டம்பர் 30ம் தேதி கடைசி நாள். அக்டோபர் 1ம் தேதி ஹெலன் இறந்ததால் அவருடைய பெயரை வாக்குச்சீட்டில் இருந்து நீக்க முடியவில்லை. திட்டமிட்டபடி தேர்தல் நடந்தது.
நேற்றைய வாக்கு எண்ணிக்கையில், இறந்த வேட்பாளர் ஹெலன் வெற்றி பெற்றார். அவருக்கு 664 வாக்குகளும், எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் சக்தி கனி 496, கற்பகம் 346, ஜெயந்தா 110 வாக்குகளும் பெற்றனர்.
இறந்துபோன வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதால், மீரான்குளம் பஞ்சாயத்து தலைவர் தேர்தல் முடிவை நிறுத்தி வைப்பதாக வாக்கு எண்ணும் மைய அதிகாரி பழனி தெரிவித்தார்.
மறுதேர்தல் நடத்தப்படும்
மீரான்குளத்தில் இறந்த பெண் வேட்பாளர் வெற்றிப் பெற்றது குறித்து குறித்து தூத்துக்குடி கலெக்டர் பழனியாண்டியிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், உள்ளாட்சி தேர்தல் பணிகள் முடிந்ததும் அந்த பஞ்சாயத்துக்கு மறு தேர்தல்
3) வேலூர் நகராட்சியில் குலுக்கல் முறையில் தே.மு.தி.க. வெற்றி
வேலூர் நகராட்சி 11வது வார்டில், தே.மு.தி.க. வேட்பாளர் குலுக்கல் முறையில் வெற்றிபெற்றார்.
வேலூர் நகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை, தந்தை பெரியார் பாலிடெக்னிக்கில் நடந்தது. 11வது வார்டில் நடந்த ஓட்டு எண்ணிக்கை முடிவில், தி.மு.க. வேட்பாளர் ஜெயப்பிரகாஷ், தே.மு.தி.க. வேட்பாளர் பாலசுந்தரம் ஆகியோர் தலா 470 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர். இதனால் தேர்தல் ஆணைய விதிப்படி, குலுக்கல் முறையில் வெற்றியை நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது.
இரண்டு பெயர்களும் காகிதத்தில் எழுதி குலுக்கல் நடத்தப்பட்டது. அதில், ஒரு பேப்பரை எடுத்து பார்த்தபோது, தே.மு.தி.க. வேட்பாளர் பாலசுந்தரம் பெயர் இருந்தது. அதனால், அவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றிகுறித்து, தே.மு.தி.க. வேட்பாளர் கூறுகையில், “கடவுள் ஆசியால் வெற்றி பெற்றுள்ளேன். வார்டு மக்களுக்கு நல்லது செய்வேன்‘‘ என்றார்.
4) திட்டக்குடி குலுக்கலில் வென்றார் சுயேச்சை
திட்டக்குடி 3 வது வார்டில் மொத்தம் 682 ஓட்டுகள் உள்ளன. இந்த வார்டில் சுயேச்சைகளும் திமுக கூட்டணியில் பாமகவும் போட்டியிட்டன. இறுதி சுற்றில் அக்பர் 222 ஓட்டுகளும் தபால் ஓட்டு 1ம் வாங்கி மொத்தம் 223 ஓட்டுகள் வாங்கியிருந்தார்.
பாமக வேட்பாளர் அன்பழகன் 221 ஓட்டுகளும் தபால் ஓட்டு 2ம் வாங்கி அவரும் 223 ஓட்டுகள் வாங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து இரண்டு பேரின் பெயர்களையும் எழுதி போட்டு குலுக்கி வெற்றி பெற்றவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு தேர்தல் அதிகாரி கலாவதி வந்தார். அதற்கு பாமக வேட்பாளர் அன்பழகன் மறுப்பு தெரிவித்தார். இருந்தும் தேர்தல் விதிகளை எடுத்துக்கூறி கலாவதி அவரை சம்மதிக்க வைத்தார். குலுக்கலில் சுயேச்சை வேட்பாளர்
5) தோல்வி அடைந்ததால் வேட்பாளர் தற்கொலை
வேலு£ர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியம் இளையநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (எ) லட்சுமண சிங் (60). இளையநகரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து, அவருடைய தம்பி பீம்சிங் (50) போட்டியிட்டார்.
நேற்றைய வாக்கு எண்ணிக்கையில், பீம்சிங் 225 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். லட்சுமணசிங் 115 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதனால், வேதனை அடைந்த லட்சுமணசிங், அருகில் இருந்த வயலுக்குச் சென்று பூச்சி மருந்து குடித்தார். வாணியம்பாடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். வாணியம்பாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
6) எண்ணிக்கை மையத்தில் பரபரப்பு போலி சீட்டுடன் வந்த வேட்பாளர்
நாகர்கோவில் நகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை, எஸ்.எல்.பி. பள்ளியில் நேற்று நடந்து கொண்டிருந்தது. 24வது வார்டில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் அர்ச்சுணபாண்டியனும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் இருந்தார்.
திடீரென அவர் 4 வாக்குச் சீட்டுகளை தூக்கி காட்டி, எனது வார்டுக்குட்பட்ட வாக்குச் சீட்டுகள் கீழே கிடக்கிறது என்று புகார் கூறினார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் அவற்றை வாங்கி பார்த்தனர். இதில், அந்த வாக்குச்சீட்டுகள் போலியானவை என்பது தெரியவந்தது.
இதுகுறித்து நகராட்சி தேர்தல் பொறுப்பாளர் காதர்மொய்தீன் கூறுகையில், ‘‘சுயேச்சை வேட்பாளர் காட்டிய வாக்குச் சீட்டுகளில் போலியானவை. இவற்றில் நகராட்சி முத்திரையோ, தேர்தல் அதிகாரி கையெழுத்தோ இல்லை. இவை எப்படி அர்ச்சுண பாண்டியன் கையில் கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.
நன்றி: தினகரன்