04.சத்திய சோதனை


சத்திய சோதனை
(வேறு ஒன்றுமில்லை சுயபுராணம்
என்பதினைத்தான் அப்படி முலாம் பூசிச் சொன்னேன். காந்தியடிகளை அவமானப்படுத்து போல உண்ர்ந்தால் அடிக்க வராதீர்கள்,அடிக் கோடிட்டுக் காட்டுங்கள். நானே நடுக்கோடிட்டு அடித்து விடுகிறேன்)

ரேஷன் கார்டில் பதிவுசெய்ய முயன்று கணக்கு எடுக்கும் நேரத்தில் ஊரில் இல்லாததால் விடுபட்டுப் போயிற்று (புதிய கார்டுக்கு நாயாய் அலைந்து கொண்டிருப்பது தனிக்கதை)

பின்னர் வோட்டுப் போடவாவது அடையாள அட்டை வாங்கலாம் என்று இருந்த போது நாடு விட்டாயிற்று. (இனி அடுத்தத் தேர்தல் வரை காத்திருக்க வேண்டியதுதான்)

எனவேதான் வலை ஆரம்பித்த உடனே, மதுமதி அவர்கள் கணக்கு எடுக்கிறார் என்றதும் ஓடி (தவழ்ந்து) வந்து வரிசையில் நிற்கிறேன். (பதிவுக்கான கெடு முடிந்து விட்டதா?)

வலைப்பதிவர் பெயர்:
மதி

வலைப்பூ பெயர் :
எண்ணச்சுவடி (பெயரைப் பார்துவிட்டு ஏதோ பழைய பஞ்ஞாங்கம் என நினைத்து விடப் போகிறீர்கள்)

சுட்டி(url) :
perunthottam.blogspot.com

ஊர்:
சீர்காழியை அடுத்த சிறு கிராமம்-பெருந்தோட்டம். தற்போதய வாசம் மயிலாடுதுறை

நாடு:
இந்தியா. (தற்போது இருப்பது நைஜீரியாவில்)

வலைப்பூ அறிமுகம் செய்தவர்:
கணனிதான், வலையில் உலா வரும் போதுதமிழ்மணம் வலையில் வீழ்ந்தேன். நானும் வலைப்பூவாய் பூத்தேன்

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :
27 மே, 2006

இது எத்தனையாவது பதிவு:
நான்காவது

இப்பதிவின் சுட்டி(url):

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:
(நம்மால் தமிழ் கொஞ்சம் வளரட்டுமே என்றுதான் என்றால் உதைக்க வர மாட்டீர்களா?) நான் கண்ட, கேட்ட,படித்த பல விஷயங்களை பகிர்ந்து கொள்ள/பதிவுசெய்து வைக்க.

சந்தித்த அனுபவங்கள்:
இப்போதுதானே மொட்டு விட்டிருக்கிறேன்.மலர்ந்து மாலையாகும் போதுதானே அனுபவம் அதிகரிக்கும்

பெற்ற நண்பர்கள்:
பல நல்ல உள்ளங்கள்.

கற்றவை:
எல்லாவற்றிலுமே இன்னும் கத்துக்குட்டிதான் (ஒன்றும் உருப்படியாகத் தெரியாது என்பதினை இப்படி நாகரீகமாகச் சொல்லலாம் அல்லவா)

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:
தடையிருக்காது என நம்புகிறேன்

இனி செய்ய நினைப்பவை:
(நாவல்கள், காவியங்கள் எழுதுவது என்றால் நம்பவாப் போகிறீர்கள்) பல விஷயங்களை பகிர்வதை தொடர்வது.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
காவிரி நதிக்கரையில் பிறந்து,வளர்ந்து, பாலாற்றங்கரையிலே (ராணிப்பேட்டை)பிழைப்பு நடத்தி, திரைகடல் ஓடி திரவியம் தேடி,அரபு நாட்டு வெய்யிலில் காய்ந்து,அசர்பைஜான் பனியில் உறைந்து, நைஜீரியாவின் மழையில் நனைந்து கொண்டிருக்கிறேன்.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
வாழ்க தமிழ்! வளர்க நட்பு !

03. மெய்ப்பொருள் காண்பதறிவு - 1



மெய்ப்பொருள் காண்பதறிவு

நாம் அடிக்கடி கேள்விப்பட்ட பழமொழிகள் பல தற்போது நாம் புரிந்து கொண்டிருக்கும் பொருளில் தான் சொல்லப்பட்டதா என்பது எனது நீண்ட நாளைய சந்தேகம்.

மறைந்த தவத்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகளின் பேச்சின் ஒலிப்பதிவை அண்மையில் கேட்க்க நேர்ந்தது. அதில் அவர் ஒரு பழமொழிக்கு புது விளக்கம் தந்திருந்தார். அதன் வழியே யோசித்துப் பார்த்த போது பலவற்றினுக்கு மெய்ப்பொருள் வேறாக இருக்குமெனத் தோன்றுகிறது.

"அரசனை நம்பி புருஷனை கை விட்டது போல" என்ற ஒரு சொல் நம் நாட்டில் வழங்கி வருகிறது.

அதற்கு நேரடியான அர்த்தமாக நாம் புரிந்து கொண்டிருப்பது: ஒரு பெண் தன் கணவனை விட்டு விட்டு ராஜ வாழ்க்கை வாழ அரசனுடன் சென்று பின் அவனால் அந்த புரத்தில் நூற்றோடு ஒன்றாக தள்ளப் பட்ட போது
'அரசனை நம்பி வந்தது எவ்வளவு தவறு' என்பது புரிய வந்தது என்பதாகும்.


எனவே அரசன் என நினைத்து இருக்கும் புருஷனை கைவிட்டு மற்றவரை நம்பிச் செல்ல வேண்டாம் என சொல்ல வந்தது போல் அந்த பழஞ்சொல்லை நாம் வழக்கத்தில் கையாண்டு கொண்டிருக்கிறோம்.


உண்மையில் அதன் அர்த்தம் வேறு என்பது வாரியார் அவர்களின் வாதம். கற்பில் சிறந்த க்ண்ணகி வாழ்ந்த தமிழ் நாட்டில் பெண்களைப் பற்றி இழிவாக அப்படி ஒரு சொல் ஏற்பட்டிருக்குமா?

பின் அதன் உண்மைப் பொருள்தான் என்ன?


முன் காலத்தில் திருமணமாகியும் குழந்தை பிறக்காத பெண்கள் அரச மரத்தைச் சுற்றி வந்தால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை இருந்துவந்தது. ( அது உண்மை என்றும்,அரசு மற்றும் வேப்ப மரக் காற்றில் உள்ள வாயுமூலக்கூறுக்களை பெண்கள் சுவாசிக்கும் போது கர்ப்பப்பையில் உள்ள கிருமிக்கள் இற்ந்து, கர்ப்பப்பை சுத்தமாகிறது என்பதும் தற்போது அறிவியல் கூறுகிறதாமே!) 'அரச மரத்தை சுற்றி விட்டு அடி வயிற்றைப் பார்த்தது போல' என்று அவசரப்படும் ஜென்மங்களுக்குச் சொல்லப்படும் எடுத்துக்காட்டிலிருந்தும் அரச மர நம்பிக்கையை அறியலாம்.


எனவே குழந்தைப் பேறு வேண்டி ராத்திரிப்பகலாக அரசமரத்தடியிலேயே தவம் கிடக்க ஆரம்பித்து விட்டனர் அக்காலப் பெண்கள். வீட்டில் கணவன் என்று ஒருவன் இருக்கிறான்,அவனது துணையும் இதற்கு அவசியம் என்பதினையும் மறந்து விட்டனர். அவர்களது நம்பிக்கை நடைமுறைக்கு உதவாதல்லவா? இதனைக் குறிக்கவே "அரசை (அரச மரத்தை) நம்பி" என்று இருந்திருக்க வேண்டியச் சொல்"அரசனை நம்பி" என்று மாறி(மருவி)யிருக்க வேண்டும்.

எனவே இனி இப்பழ மொழியை " அரசை நம்பி புருஷனை கை விட்டது போல" என்றே கூறுவோம்.

02.படித்ததில் பிடித்தவை



படித்ததில் பிடித்தவை

புதுக்கவிதைகள்

லஞ்சம்
வாங்கினேன்! பிடித்து விட்டார்கள்
கொடுத்தேன்! விட்டுவிட்டார்கள்.

வாழ்க்கை
சலவைச் சட்டைக்குள்
சல்லடை பனியன்.

தோல்வி
விதைக்கும் நேரத்தில் தூங்கியவன் நீ!
அறுவடை நேரத்தில் ஏன் அழுகிறாய்?

பதவி
எங்கள் ஊரில் ஒருவர்
ஊராட்சி மன்ற தலைவரானார்,
சட்ட மன்ற உறுப்பினரானார்,
அமைச்சரானார், அயல் நாட்டுத் தூதுவரானார்,
இறுதிவரை
மனிதனாகாமலே மரணமானார்.

கோலம்
கருப்பு வளையல் கையுடன்
ஒருத்தி
வளைந்து, நெளிந்துப்
பெருக்கிப்போனாள்,
வாசல் சுத்தமாச்சு.
மனம் குப்பையாச்சு.

கேட்டவை

ஜீரணமகாத உணவு வயிற்றைக் கெடுக்கும்
ஜீரணமகாத படிப்பு மூளையைக் கெடுக்கும்

கல்லூரி விழாவில் மாணவர் ஒருவர் பேசியது:

"We are not useless;
But we are used less"

(குறிப்பு: என்ன எல்லாம் சுட்டச்சரக்குதானா? சொந்த சரக்கை ஒன்றையும் காணோமே? என்று கேட்பது புரிகிறது. என்னதான் ஆறு, குளம், குட்டைகளில் நீந்தியிருந்தாலும், கடலில் நீந்தப் போகும்போது மற்றவரின் கைபிடித்து முதலில் இறங்குவதுதானே பாதுகாப்பானது, அதுதான் முதலில் "வந்த: சரக்கே இங்கே!)

01.அரிச்சுவடி


வணக்கம்.

இது என் முதல் பதிவு.

"கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானுமதுவாக பாவித்து"என்பது போல கணனியில் கரை கண்டோர் வலையில் விதைப்பது கண்டு, மேய்ந்து கொண்டிருந்த நானும் சிந்தனைகளைத் தூவ வந்துள்ளேன்.

வந்தாரை வலை வீசி விதைக்க வைக்கும் "தமிழ்மணம்" வலை அமைப்பு மையத்திற்கும், தமிழில் எழுதவைத்துக் கொண்டிருக்கும் திரு சுரதாவின் எழுத்துரு மாற்றிக்கும் நன்றியுடன் கால் பதிக்கின்றேன்.

Related Posts with Thumbnails