26.மெய்ப் பொருள் காண்பது அறிவு- 4

பணம் இல்லாத காரணத்தால் பிரச்சனையில் இருப்பவ‌ர்களும், தோல்வியைத் தழுவியவ‌ர்க‌ளும் சலித்துக் கொண்டு சொல்லும் பழமொழி,"பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே." பணம் படைத்தவ‌ர்களுக்கு முதல் ம‌ரியாதை தந்து, நல்ல குணம் படைத்தவ‌ர்களை அவம‌ரியாதை செய்யும் 'பண'நாயக ஆட்சி நடக்கும் இக்காலத்தில் அப் பழமொழியின் நேரடி அர்த்தத்தை ஏற்றுக் கொள்ளலாம்.




நாடி வந்தவ‌ர் ஆண்டியாயினும், அவ‌ர் வாடி விடாமல் இருக்க, கட‌ன் வாங்கியாவது வடித்துக்கொடுக்கும் விருந்தோம்பலில் முதலிடம் வகித்த பழந்தமிழகத்தில் இப்பழமொழி வேறு அர்த்தத்தில் வழங்கி இருக்கலாமில்லையா?

ஒரு நடுத்த‌ர‌ குடும்பம் என்றால் அவ‌ர்க‌ளது சைவ‌ விருந்து வடை பாயாச‌த்துடன் முடிந்துவிடும்.

சற்று வ‌ச‌தியான குடும்பம் என்றால் வ‌ழ‌க்க‌மான் ஐட்ட‌ங்க‌ளுடன், ஐஸ்கிரீம், சூப், ப‌ழம் என்று எக்ஷ்ட்ரா‌ ஐட்ட‌ங்கள் காணும்.

அதுவே வ‌ச‌தியான‌வ‌ர்க‌ளது விருந்தானால் எண்ண முடியாத‌ அள‌விற்கு மெனு இருக்கும். பஃபே யில் எதைவேண்டுமான‌லும் எடுத்து சாப்பிட‌லாம்.

எனவே ஒருவர் வீட்டு ப‌ந்தியை(விருந்தை)ப் பார்த்தே அவ‌ர்க‌ளின் வ‌ச‌தியை ம‌திப்பிட‌லாம்.

ஏழை அவ‌னுக்கேற்ற‌ எள்ளுருண்டையை ப‌ந்தியிலே வை‌க்கிறான்.

இருக்கிற‌வன் இலையிலே வ‌ச‌தியைக் காட்டுகிறான்.

எனவே ஒருவ‌னது வ‌ச‌தியை (ப‌ணம்) விருந்திலே காண‌லாம் என்ப‌தையே ப‌ணம் ப‌ந்தியிலே (காண‌லாம்) என்று சொல்லியிருக்க வேண்டும்.

அப்ப‌டியானால் குப்பையிலே போயா குண‌த்தைத் தேட முடியும்?
பணத்திற்காக குண‌த்தை தூக்கி குப்பையிலே போடு என்ப‌துதான் ச‌ரியாக‌ இருக்குமா?

நண்பர் ஒருவ‌ரது திரும‌ணம் திருச்சியில் ந‌ட‌ந்தது. நான் முதல் நாளே சென்றிருந்தேன்( ப‌ந்திக்கு முந்த‌தான்). அவரது அலுவ‌ல‌க‌ நண்பர்க‌ளும் சென்னையிலிருந்து முதல் நாளே வ‌ந்திருந்த‌னர்.

அன்று பகல் முழுவ‌தும் ஊரைச் சுற்றிக்காட்ட, என் ந‌ண்பன் அவ‌ர‌து தூர‌த்து உற‌வினர் ஒருவரை அழைத்து, "மாமா! இவ‌ங்கள த‌னியா அனுப்பினா போற‌ எட‌ம்லா பிர‌ச்சனை ப‌ண்ணிட்டு வ‌ந்துடுவானுங்க. அப்றம் ந‌ம்மப் பேரு கெட்டுப் போயிடும். அத‌னால‌ அவ‌ங்க கூட‌ ஊரை சுத்திக் காட்ற சாக்குல நீங்கப் போயிட்டு வாங்க" என்றான்.

அவ‌ரும் திருமண வேலையெல்லாம் அம்போன்னு விட்டுட்டு வாலிபக் கூட்ட‌த்தோட‌ ஐக்கிய‌மாக்கிக் கொண்டார்.

அன்று இரவு "எங்கேல்லாம் போனிங்க?" என்று அவரை விசாரித்தேன்.என்னப்பா, friends ப்ப‌த்தி இப்படி சொல்லிட்டான். எல்லாம் ந‌ல்லப் ப‌ச‌ங்க‌ப்பா. முக்கொம்பு போவ‌லான்னா, கோயிலுக்கு கூட்டிப் போகச் சொன்னாங்க‌ப்பா. அப்றம் ம‌லைக்கோட்டை, ஸ்ரீர‌ங்கம், வ‌ய‌லூர்னு சுத்திட்டு வ‌ர்றோம்" என்றார்.

பெருசுகள் சீட்டுக் க‌ச்சேரியைத் துவ‌ங்க, இள‌சுகள் பாட்டில் க‌ச்சேரியை ஆர‌ம்பித்த‌னர். நண்ப‌ர்கள் அனைவ‌ரும் வ‌ட்டம் க‌ட்டி தரையில் உட்கார்ந்திருக்க‌,ஒருவர் ம‌ட்டும் நாற்காலிப் போட்டு ஓர‌மாக‌ அம‌ர்ந்திருந்தார். அவர் கையில் fanta பாட்டில்!. நானும் மாமாவும் அந்த‌ அறையைக் க‌ட‌க்கும் போது இக்காட்சியைக் க‌ண்டோம்.

நான் வ‌லியச் சென்று, "ஏன். அவரு பார்ட்டியில க‌ல‌ந்துக்க‌லயா? இன்னைக்கு விர‌த‌மா" என்றேன் கேலியாக‌.

"யாரு, சுரேஷா?, அவ‌ன் pant ப்போட்ட சாமியாருங்க. எங்க gangல சேர்ந்து வ‌ந்திர்க்கிறதே அதிச‌ய‌ங்க" என்றார் பாட்டில் ப‌ங்கீட்டாளர்.

"இன்னைக்கு ஒரு நாள் பார்டியில‌வாவது, 'friend டோட சுத‌ந்திரம்' ப‌ரிபோறத நினைச்சி க‌ல‌ந்துக்க‌லாம்ல" என்றேன்.

"அட நீங்க‌ ஒண்ணு, வரும்போது பாண்டி(புதுச்சேரி) வந்துட்டு வந்தோம், அங்க 'அந்தக் கடல்லயே' காலநனைக்காம வந்தவன், இந்த 'காவேரி தீர்த்தத்ல'யா குளிக்கப் போறான்" என்றார் அவர் ந‌ண்பர்.

"சரி! சரி! அவரு ந‌ல்லவராவே இருந்துட்டுப் போகட்டும். அவர compel பண்னாதீங்க‌" என்று சொல்லி திரும்பி நடந்தேன்.

அவ‌ர்கள் பேச்சின் அர்த்தம் புரியாம‌ல் என்னை 'ஙே' என்று பார்த்தார் மாமா.
"என்ன சொல்றாங்க‌, குளிச்ச‌ப்ப‌ற‌மாதன் பீர் குடிப்பாராமா?" என்றார் அப்பாவியாக‌.வந்த சிரிப்பை அட‌க்கிக் கொண்டு அவ‌ர்க‌ளின் பேச்சில் இருந்த 'உள்குத்தை" புரிய வைத்தேன்.

மறுநாள் திரும‌ணம் முடிந்து அனைவ‌ரும் புற‌ப்ப‌ட்டுக் கொண்டிருந்தனர். நண்பர் குழாம் காலையிலேயே இடத்தை காலி செய்துவிட்டிருந்தது.நானும் விடைபெற புது மாப்பிள்ளையிடம் சென்ற போது, அவனது மாமாவிடம் பேசிக்கொண்டிருந்தான்.
"என்ன சொல்றார் மாமா?" என்றேன்.
அதற்கு அவரே என்னிடம்" அது ஒண்ணுமில்ல தப்பி! இவனோட friend சுரேஷ் இருக்கன் பாரு அவனைப் பத்தி விசாரிச்சிட்டு இருக்கேன்.
என் அண்ணன் பொண்ணு படிச்சுட்டு கல்யாணத்துக்கு காத்திகிட்டு இருக்கா. அதுதான் தோதுபட்டு வருமான்னு பார்க்கிறேன்"

"என்ன மாமா! பாத்த ஒரு நாள்ளவே அவரு நல்லவருன்னு முடிவு பண்ணிட்டீங்களா?" இது நான்
"பார்டா, நான் கூட குடிக்க மாட்டேன்னு நல்லாத்தெரியும். மாமா அந்தப்பொண்ண எனக்கு கொடுக்க நினைச்சாராப் பாரு" என்றான் நண்பன்.
"அத இனி யோசிச்சு என்ன பண்றது. உன் தலைவிதியத்தான் முடிவு பண்ணியாச்சே காலையிலேயே" கிண்டலடித்தேன் நான்.

உடனே மாமா விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார்,"இல்ல மாப்ள! நீங்க குடிக்கிலங்கிறது வேற.மெட்றாஸ்ல சித்தப்பா வீட்ல இருந்துகிட்டு வேலைக்குப் போயிட்டு வர்ரீங்க.வேலை முடிஞ்சு வரவே நைட்டாயிடுது.வெளிய சுத்த நேரமே இல்ல. உங்களுக்கு இதுபோல ஒரு சான்ஸ் வந்தா எப்படி நடந்துப்பிங்கன்னு எங்களுக்கு தெரியாதில்ல.
குடிக்காதவங்க மத்தியில இருந்துகிட்டு குடிக்காம இருக்கிறது பெருசு இல்ல.
நேத்தி அந்தப் பையன கட்டுப் படுத்த யாருமில்ல. போதாதுக்கு friends வேற கம்பல் பண்றாங்க, அப்படியும் குடிக்கலன்னா, எப்பவும் குடிக்க மனசு வராது தம்பி."

"அது எப்படி மாமா இவ்வளவு நம்பிக்கையா சொல்றீங்க?"

"தம்பி! என் மாப்ள நல்லவனா இருக்கலாம்.ஆனா அவன எப்போவும் நல்ல பசங்கக்கூடயே (this include me also!) பார்க்கறததால அவனோட உண்மையான குணம் தெரியல, ஆனா குப்பைக்கு மத்தியில மாணிக்கம் ஜொலிகிறதப் போல குடிக்கிறவங்க மத்தியில அந்தப்பையனோட குணம் பளிச்சுன்னு தெரிஞ்சுது.
சிலப்பதிகாரத்துல கற்புக்கரசி கண்ணகிக்கு ஈடா மாதவிய ஏன் பேசறாங்கன்னா, அவ பரத்தை குலத்துல பிறந்தும் ஒருவனுக்கு ஒருத்தின்னு வாழ்ந்தா.
அவ நினைச்சா யார் கூட வேணாலும் போயிருக்க முடியும். அவளுக்கு அப்படி ஒரு சுதந்தரத்த சமூகம் கொடுத்து இருந்தது. ஆனா அவ போகல. அங்கதான் அவளோட குணம் நிக்குது. தப்பு பண்ண சந்தர்ப்பம் இருக்கும் பரத்தை குலம்ங்கிற குப்பைகளுக்கு நடுவே இருந்தும் தப்பு பண்ணாததால ஜொலிச்சா" என்று பெரிய லெக்சர் அடித்தார் மாமா.

நண்பன் மிரண்டுப் போய் எங்களைப் பார்க்க, நானும் என் பங்குக்கு
"ஆமாம் மாமா, வெள்ளைப் பேப்பர்ல வெள்ளை sketchசால எழுதினா சரியாத் தெரியாது, கருப்புப் பேப்பர்ல வெள்ளை sketchசால புள்ளி வச்சாலே பளிச்சுன்னுத் தெரியும். அதுமாதிரி Backgroundதான் படத்த எடுப்பா காண்பிக்கும்னு சொல்றீங்க" என்று தத்துவத்தை எடுத்து விட்டேன்.

நண்பன், அப்போ குப்பையிலதான் குணத்த தேடுனும்னு சொல்றீங்க?" என்று கேட்டான்.

"இல்ல, இல்ல, குப்பையிலதான் குணம் பளிச்சுன்னு தெரியும்ங்கிறேன்" மாமா விளக்கம் கொடுத்தார்.

அப்போதுதான் இந்த பழமொழி எனக்கு ஞாபகத்திற்கு வந்தது.
குணத்தை குப்பையிலே போட சொல்லியிருக்க மாட்டாங்க, குப்பையில பளிச்சுன்னுத் தெரியும்னு சொல்லிருருப்பாங்கன்னு தோணிச்சு.

ஆக இந்தப் பழமொழியை , பணம் (செல்வாக்கு)பந்தியில் தெரியும், குணம் குப்பையில் (தப்பு பண்ணும் வாய்ப்புகளுக்கிடையே) தெரியும் அப்படிங்கிற பொருளில் கூட சொல்லியிருக்கலாமில்லையா?



பின் குறிப்பு: மாமா சென்றவுடன் நண்பனிடம் நான் ஒரு சந்தேகம் கேட்டேன்,"ஏண்டா? உங்க மாமா வீட்ல கல்யாணத்துக்கு தயாரா ஒரு பொண்ணு இருக்குன்னு friends கிட்ட முன்னாடி எப்பவாது சொல்லிருந்தியா?"

25.புதுமனை புகுவிழா அழைப்பிதழ்


வணக்கம்

அன்புடையீர், நாளது 2007 ஆம் ஆண்டு பிப்ரவரித்திங்கள் ஒன்றாம் தேதி முழுமதி நிறைந்த நன்னாள் பழைய பிளாக்கர் மனையிலிருந்து புது பிளாக்கர் மனைக்கு குடியேறி உள்ளேன். வழக்கம் பேல அனைவரும் அடிக்கடி வருகைத்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


குறிப்பு 1 : வந்தவர்கள் "மெய்" எழுதிவிட்டுப் போகவும்.


குறிப்பு 2 : இது ஒரு திரட்டிகளுக்கான சோதனைப் பதிப்பு



Related Posts with Thumbnails