37. மீண்டும் ஒரு புத்திசாலி திருட்டு


புத்திசாலி திருட்டை பத்திய செய்தி படித்து இரண்டு நாள் கூட ஆகல இதோ மீண்டும் ஒன்று. ரூம் போட்டு யோசிப்பாங்களோ???

சேலத்தில் எலக்ட்ரிகல் சாதனங்கள் விற்பனை டீலராக இருப்பவர் ஆறுமுகம். சில மாதத்துக்கு முன் வாடிக்கையாளராக அறிமுகமானார் ஒரு "டிப்டாப்' ஆசாமி. 35 வயதுள்ள அவர் தன்னை வினோத்குமார் என்றும், பெரிய பிசினஸ் மேன் எனவும் கூறினார். அதற்கேற்ப விலையுயர்ந்த கேமரா மொபைல் போன் மற்றும் வாட்ச், பிரேஸ்லெட் அணிந்திருந்தார்.ஒரு நாள் ஆறுமுகத்திடம் சற்றே பதட்டத்துடன் வந்த வினோத்குமார், "சார்... என்னோட ஏ.டி.எம்., மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருந்த பர்ஸ் தொலைந்து விட்டது. அதற்காக விண்ணப்பித்துள்ளேன். எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது. எனது நண்பர்கள் மதுரையில் இருந்து பணம் கொடுக்கவும் தயாராக உள்ளனர். நீங்கள் சம்மதித்தால், உங்களது வங்கிக் கணக்கில் அவர்கள் பணத்தை கட்டிவிடுவர். அந்த பணத்தை எடுத்து என்னிடம் கொடுக்க முடியுமா?' என மிகுந்த பணிவோடு கேட்டார்.

ஆறுமுகமும் தனது வங்கிக் கணக்கு எண்ணை கொடுத்தார்.

ஒரே வாரத்தில் மூன்று முறை தலா ரூ.80 ஆயிரம் வீதம் மதுரையில் இருந்து அவரது வங்கிக் கணக்கில் பணம் கட்டப்பட்டது. அவற்றை அவ்வப்போது வந்து வினோத் வாங்கிச் சென்றார்.

மீண்டும் ஆறுமுகத்திடம் வந்த வினோத், "சார்... எனது மனைவி சிங்கப்பூரில் இருந்து திரும்பி வருகிறார். உங்களுக்கு ஏதேனும் தேவையாக இருந்தால் அவற்றை வாங்கி வரச்சொல்கிறேன்' என்றார்.அதை நம்பிய ஆறுமுகமும், சிங்கப்பூரில் நகைகள் விலை குறைவாக இருக்கும் எனக்கருதி, ரூ. 50 ஆயிரத்துக்கு நகைகள் வாங்கிவர சொன்னார்.

அதற்கான பணத்தை வினோத்குமாரின் மனைவியின் வங்கி கணக்கு எண் என கொடுக்கப்பட்ட எண்ணில் செலுத்தினார். அதன்பின் வினோத் கடை பக்கமே வருவதில்லை. அவரது மொபைல் போன் தொடர்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.

இத்துடன் மதுரையில் இருந்து ஆறுமுகத்தை தேடி போலீசார் வந்தனர். மதுரையில் வேலையில்லாத இளைஞர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் கட்ட கூறியதாகவும், அதன்படி மூன்று இளைஞர்கள் தலா ரூ.80 ஆயிரத்தை சேலத்தில் உள்ள ஆறுமுகத்தின் வங்கிக் கணக்கில் கட்டியதாகவும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆறுமுகம் தானும் ஏமாற்றப்பட்ட கதையை போலீசாரிடம் விளக்கினார்.

வினோத்தின் மனைவியின் வங்கிக்கணக்கை ஆராய்ந்தபோது, திருப்பூரில் இதே பாணியில் வேறொருவர் ஏமாற்றப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இந்த மோசடியில் தமிழகம் முழுவதும் பலரும் ஈடுபட்டிருப்பதை அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நன்றி: தினமலர் 22/10/07

Related Posts with Thumbnails