11.காதல்
காதல் என்பது குறித்து இவர்களிடம் கருத்துக் கேட்டால் என்ன பதில் கூறுவார்கள் என்று கற்பனை செய்த போது வந்தது இது. மற்றபடி யாரையும் புண்படுத்துவதற்காகவோ, கேலி செய்வதற்காகவோ இல்லை எனபதினை ஆரம்பத்திலியே சொல்லிக்கொள்கிறேன். அத்துமீறலாக உணர்ந்தால் மன்னித்துக் கொள்ளவும்.
முதலில் அரசியல் வாதிகளிடமிருந்து ஆரம்பிப்போம்.
கலைஞர்:
காதல் என்பது காதலியின் மனக் கோட்டையிலே முதல்வராக அமர்வது. அதற்காக கலர் லிப்ஸ்டிக், கலர் சேலை போன்றவற்றை இலவசமாகத் தருவதாக அறிவிக்கலாம்.காதலிக்க வேண்டுமானால் கூட்டு சேர்ந்துக் கொள்ளலாம். ஆனால் மனதில் இடம் பிடிக்கும் போது கூட்டாட்சிக் கூடாது.
ஜெயலலிதா:
காதலில் வெற்றித் தோல்வி என்பது சகஜம். தோற்றாலும் நாம் காதலரை சந்தித்த நாட்களின் சதவிகிதத்தை கணக்குப் போட்டுப் பார்த்தால், வெற்றி பெற்றவரை விட அதிகமாகத்தான் இருக்கும். அதற்காக யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம். அப்படி இது வரை காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டவர்களின் குடும்பத்திற்கு 1 லட்சம் ரூபாய் கட்சி நிதியிலிருந்து அளிக்கப் படும்.
வை.கோ:
எப்படியும் சட்ட சபையில் சாரி! சாரி! மனதில் இடம் பிடித்திட வேண்டும் என்று, அவர்கள் கொடுத்த இன்னல்களை எல்லாம் மறந்து சரண் அடைந்து விடுவதுதான் காதல். அதற்காக மேடைப் போட்டு பேசி பேசியே ஆதரவு திரட்டலாம்.
விஜயகாந்த்:
ஒரே ஒரு மனதில் இடம் பிடித்திருந்தாலும், நம்மை தேர்வு செய்தவர்களுக்காக உழைத்து அவர்கள் வளர்ச்சிக்குப் பாடுபடுவதே காதல். அவர்கள் மனதில் கேப்டனாக இடம் பெற எப்படி நடித்தலும் பரவாயில்லை.
அடுத்து திரைப்படத்துறையினர்
பாரதிராஜா:
என் இனிய தமிழ் மக்களின் மண்வாசனை. கல்லுக்குள் உண்டகும் ஈரம். 16 வயதினிலே ஏற்படும் கடலோர கவிதைகள். சிகப்பு ரோஜாக்களை கொடுத்து, தாஜ்மஹாலை வளைக்கும் மந்திரம். புதிய வார்ப்புகளின் வாலிப விருந்து.புது நெல்லுக்கும் புது நாத்துக்கும் உள்ள உறவு.
விஜய T.ராஜேந்தர்:
ஆணுக்கும் பெண்ணுக்கும் வருவது காதல்
ஆரம்பமாகும் இடமோ இருவரின் மோதல்
அது கைக் கூடவில்லை எனில் சாதல்
அல்லது இருவரும் இணைந்து ஒருவராய் ஆதல்.
ரஜனிகாந்த்:
இது பற்றி இப்போது எதுவும் கருத்து சொல்லக் கூடாது. சிவாஜி படம் முடியும் வரை எதையும் பேச விரும்பவில்லை. அதற்குப் பிறகு இமயமலை அடிவாரம் சென்று ஓய்வெடுத்து லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக கருத்தைச் சொல்கிறேன்.
கமல்:
காதல். ஒரு நல்ல விஷயந்தான். அது மருதநாயகம் மாதிரி ஜவ்வாக இழுத்துக்கொண்டு இருக்கவும் கூடாது, மும்பை எக்ஸ்பிரஸ் மாதிரி வந்ததும் தெரியாமல் போவதும் தெரியாமல் போகவும் கூடாது. காதல் பெயரில் ஏற்கனவே திரைப்படம் வந்து விட்டதால் அந்த சப்ஜட்டுக்கு ஏற்ற பிரச்சனை ஏற்படுத்தாத தமிழ் தலைப்பு தேடிகிட்டு இருக்கிறேன். அது கிடைத்ததும் துவக்க விழாவுக்கு டோனி பிளேயரை அழைக்கலாமென்று இருக்கிறேன்.
சிம்ரன்:
காதலுக்கு எல்லாரும் ஓட்டுப் போடுங்கோ. நான் இன்னும் அம்மாவைத்தான் லவ் பண்ணுது. எங்க அம்மாவை இல்லே, ஜெயா அம்மாவை.காதல் சின்னமாக ஹார்ட்டை எடுத்துட்டு ரெட்டை இலையை வச்சா , விரல காமிச்சு ஓட்டு கேட்க ஈஸியா இருக்கும்.
குஷ்பு:
திருமணத்திற்கு முன்பு பெண்கள் காதல் செய்வது தப்பு, தப்பு,மகா தப்பு. (சரின்னு சொல்லி, இதுக்கும் கோர்ட் கேஸுன்னு நம்பலால அலைய முடியாதுப்பா. ஆள விடுங்க)
வைரமுத்து:
அது ஓர் இனிய அனுபவம்.
அது இளமையின் வைபவம்.
கரிசல் காட்டின் காவியம்.
தண்ணீர் தேசத்து ஓவியம்.
சுஜாதா:
ஆணின் மூளை யிலுள்ள நியூரான்களில் ஒரு குறிப்பிட்ட பெண்ணைக் கண்டதும் சுரக்கும் ஒருவித chemicalலினால் ஏற்படும் மின் அதிர்வே காதல்.
பேச்சாளர்கள்
சாலமன் பாப்பையா:
வாங்க அப்பு! "காதல்" நல்ல அருமையான தலைப்பத்தான் கொடுத்திருக்காக. காதல்- இனக்கவர்ச்சியா, மனக்கவர்ச்சியான்னு நம்ம ராஜாவையும், பாரதி பாஸ்கரையும் வச்சி ஒரு பட்டி மன்றம் நடத்தி பொங்கல் அன்னைக்கு சன் டீவில போட்டுடலாம்.
காதல் ஒரு புனிதமான சங்கதி. நமது புராணங்களிலே பல இடத்தில் பேசப்படுவது. உங்களுக்கு சுலபமாக புரிந்து கொள்ள ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன் கேளுங்க! முருகனுக்கு பெற்றோர் பார்த்து தேவயானியை திருமணம் செய்து வைத்தார்கள். அது arranged marriage ஆனால் முருகன் வள்ளியை காதலித்து மணந்து கொண்டார். இதிலிருந்து நான் என்ன சொல்ல வர்றேன்னு புரியுதா உங்களுக்கு.
Mr.(சென்னை)பொது ஜனம்:
என்ன கஸ்மாலம் அது மாமூ ! ஐய்ய, லவ்வைப்பத்தி கேட்டுகினியா. அப்படி புய்யும் படியா தமிழ்ல கேளு நயினா! லவ்வுன்னா ஃப்கரை டாவு அடிச்சிகினு, கடல போடுறதான் மச்சி. சப்பமேட்டரு!இதுக்குப் போயி மீனிங் கேட்டுகினு கீற!
வலைப்பதிவாளர்களை மட்டும் விட்டு வைப்பானேன்.
டோண்டு:
காதல் என்று கூறிக்கொண்டு பின்னோட்டத்தில் வருகிறவர்களில் போலியின் தொல்லைத் தாங்க முடியாது. இந்த போலிகளை அடையாளம் கண்டு கொள்ள பூனைக் குட்டி சோதனை உள்ளது.அதனை தெரிந்து கொள்ள கீழ்கண்ட url கிளிக் செய்யவும்.
http://poonaikuty_soothani/dontoo. html
மாயவரத்தான்:
காதலிப்பவர்களின் வேதனைகள் தொடங்கி விட்டது. காதல், காதல் என்று சொல்லிக் கொண்டு சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர்களின் லீலைகளைப் பற்றி தின மலரில் வரும் செய்திகளை உள்குத்து இன்றி நடு நிலமையாக விமர்சித்து பதிவு இடுவேன்.காதல் செய்யும் போது கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் திருமணம் ஆன பின் நிறைவேற்றுகிறார்களா என பார்க்கவேண்டும்.
(இனியதளம்) கோகுல் குமார்:
காதல் செய்பவர்களுக்கு வசதியாக, காதல் மின்கடிதம் எழுதவும், காதலியை யாருக்கும் தெரியாமல் சந்திக்கும் தந்திரங்கள் பற்றியும் இந்த தளத்தில் இலவசமாக ஆலோசனைகளைக் காணலாம்.
காசி ஆறுமுகம்:
காதல் பற்றி தெரியாதவர்களுக்கும், புதிதாக முதன்முதலில் காதலிப்பவர்களுக்கும் வசதியாக, " உன் பாடு, என் பாடு, நம் அப்பன் பாடு" "தமிழில் காதலிக்கலாம் வாருங்கள், வலையில் சிக்கலாம் பாருங்கள்"என்ற நகைச்சுவையும், நுட்பமும் அடங்கிய கட்டுரைகளைக் காண இங்கே 'கிளிக்'கவும்.
துளசி கோபால்: காதல் part-1
நியூசிலாந்தில் முன்பு அங்குள்ள ஜோடிகள் அடிக்கடி சொல்லிக் கொள்ளும் ஆங்கில வார்த்தையின் தமிழ்ச் சொல்அது. இப்படித்தான் ஒரு முறை நாங்கள் காரில் சென்று கொண்டு இருக்கும் போது எதிரில் ஒரு கார் வேகமாக எங்களை கடந்து சென்றது. பார்த்தால் அந்தக் காரிலும் ஒரு ஜோடி. அவர்களும் காதல் ஜோடியாகத்தான் இருக்கவேண்டும். எங்களை கடந்து சென்ற கார் திடீரென நின்றது. (காதல் part-2 அடுத்த பதிவில்)
கோபி (Gopi) :
காதலர்கள் பரிமாறிக்கொள்ளும் கடிதத்தில் இருக்கும் fontஐ unicodeல் மாற்றி வாசிப்பதற்கான Toolஐ எனது ப்ருந்தாவனத்தில் காணலாம்.
நாமக்கல் சிபி:
நயன்தாராவிடம் கருத்து கேட்க்கப்படாததினால், நானும் கருத்து கூறப் போவதில்லை.
(எண்ணச்சுவடி) மதி:
மெய்ப்பொருள் காண்பது அறிவு 14(Feb)
காதல் என்பது திருமணம் செய்துக் கொள்ளத்தானே."கல்யாணம் பண்ணிப் பார், வீட்டைக் கட்டிப் பார்" என்ற பழமொழி நாம் நினைப்பதைப் போல திருமணத்தை நாமே செய்து கொள்ளவோ அல்லது திருமணத்தை நாமே நடத்திப் பார்க்க வேண்டும் என்பதோ அல்ல. மற்றவர்கள் கல்யாணம் பண்ணிக் கொள்வதை, தூர இருந்து பார் என்பதே சரியாக இருந்திருக்கும்.
ஜெயக்குமார்:
"........................................"(posting deleted) வந்த comment போலியினுடையது என்று ஒரிஜினல் ஜெயக்குமார் புகார் கூறியதால் நீக்கப்பட்டது.