10.மெய்ப்பொருள் காண்பதறிவு - 3
மெய்ப்பொருள் காண்பதறிவு - 3
"பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து" என்ற பழமொழியை திருமண வீட்டில் அடிக்கடி கேட்டிருக்கலாம்.
எங்கே கடைசி பந்திக்குப் போனால் ஜாங்கிரியும், மைசூர்பாகும் தீர்ந்து விடப் போகிறதோ என்ற கவலையும்; ரசமும்,மோரும் தீரத் தீர, நீர்த்துப் ( தண்ணீர் விட்டு பெருக்கிக்கொள்வதால்) போய்விடும் கவலையிலும் முதல் பந்திக்கே போய் விட்டால் அனைத்தையும் ஒரு பிடி பிடித்து விடலாம் என்போரின் தாரக மந்திரம் அது.
ஆனால் நினைத்துப் பாருங்கள், விருந்தோம்பலில் புகழ்பெற்ற நம் தமிழ் நாட்டில், அதுவும் தமிழகம் செழித்திருந்த அந்த காலங்களில் இப்படி ஒரு கருத்தையா சொல்லியிருப்பார்கள்?
ஒரு திருமணத்திற்குச் சென்ற எனக்கு இரு அனுபவங்கள் ஏற்பட்டது. மணமகன் தாலி கூட கட்டவில்லை, இலை போட்டாயிற்று என்று ஒருவர் சொன்னதுதான் தாமதம். திமுதிமுவென்று ஒரு கூட்டம் அடித்து பிடித்துக் கொண்டு ஓடி இடம் பிடித்தது சாப்பிட. விசாரித்தபோதுதான் அவசரத்திற்கான காரணம் புரிந்தது. திருமணம் முடிந்து அவர்களுக்கு அலுவலகம். பள்ளி செல்ல வேண்டியிருந்ததால் சீக்கிரம் வந்த வேலையை முடித்துக்கொண்டு புறப்படலாமே என்பதுதான்.
நமக்கு அப்படி ஒன்றும் வெட்டி புரட்டும் வேலையில்லாததால் மெதுவாக சாப்பிட செல்லலாமென அமர்ந்து வேடிக்கை (?) பார்த்துக் கொண்டிருந்தேன்.
அடுத்த பந்திக்காக சாப்பிட கூப்பிட வந்தவர்,"சாப்பிடாதவங்க வாங்க! அடுத்த பந்தி ரெடி!" என்று கூறிவிட்டு, எனக்கு தெரிந்தவர் ஆதலால், "வாங்கண்ணே! இலை போட்டாச்சு" என்றார் என்னைப் பார்த்து.
எனக்கு பக்கதில் இருந்தவரும் அவருக்கு தெரிந்தவர் போலிருக்கிறது. அவரையும்,"மாமா எந்திரிங்க, சாப்பிட போகலாம்" என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். நான் எழுந்து அவரையும் கூப்பிட்டு விட்டு அதற்கு அடுத்தாற் போல உட்கார்ந்திருந்த பெரியவரையும், "வாங்க போகலாம்" என்று அழைத்தேன்.
உடனே அவர் "நான் என்ன சாப்பாட்டிற்கு இல்லாமல் இங்கு வந்தேன் என்று நினைத்துக் கொண்டீர்களா?" என்றார் கோபத்தில்.
"என்ன தாத்தா இப்படி பேசறீங்க? சாப்பிட வாங்கன்னுதானே கூப்பிட்டேன்!" என்றேன்.
"நீ கூப்பிட்டா சரியா போச்சா? இங்கே வரிசையிலே நாம மூனுபேரும் உட்கார்ந்திருக்கோம், இப்ப வந்த ஆளு உங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டுவிட்டு, குத்துக் கல்லாட்டம் உட்கார்ந்திருக்கிற என்ன கண்டுகாத மாதிரி போறான். 'வாங்க தாத்தா சாப்பிடலாம்னு' ஒரு வார்த்தை மரியாதைக்கு என்னையும் கூப்பிடமப் போறான் பார்த்தேல்ல." என்றார் வெகு ஆவேசமாக. அவரை சமாதனப் படுத்தி சாப்பிட வைக்க நான் படாத பாடு பட வேண்டி இருந்துது.
இந்தப் பெரியவருக்கே இப்படி கோபம் வருகிறதே! அலுவலக்த்திற்கோ, பள்ளிக்கோ அடித்துப்பிடித்துக் கொண்டு போக வேண்டிய அவசரமில்லாத அந்தக்காலத்தில் பந்திக்கு முந்திக்கொண்டா போய் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள்?
ஒரு வீட்டில் திருமணம், விசேஷம் என்றால் இப்போது வெகுசுலபமாகப் போய் விட்டது. அனைத்திற்கும் ஒப்பந்தக்காரர்கள் உண்டு. ஒரு மண்டபத்தை ஏற்பாடு செய்து விட்டு ஒப்பந்தக்காரரிடம் பணத்தையும் கொடுத்துவிட்டால் கையைக் கட்டிக் கொண்டு கக்கத்தில் பணப் பையை வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தால் போதும். சாப்பாடு, சமையலிலிருந்து Table Cleaning வரை எதெற்கெடுத்தாலும் அதற்கு ஆள் உண்டு. அதுவும் இப்போது இருந்த இடத்திலிருந்தே தொலைப்பேசியை அழுத்தினால் போதும், அனைத்திற்கும் ஆள் ரெடி.
முன்பு அப்படி இல்லை. எவ்வளவு பெரிய விசேஷமாக இருந்தாலும் வீட்டில்தான். திருமணம் என்றால் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமல்ல தெருவில் உள்ள அனைவரும் ஆளுக்கொரு வேலையை எடுத்துக் கொண்டு செய்வார்கள். அப்போதுதான் அந்த விருந்தை சிறப்பாக செய்து முடிக்க முடியும்.
பந்தி ஏற்பாடு செய்யவேண்டுமானால் முதலில் இலை நறுக்கி, இலைப்போட்டு, இருக்கைப் போட்டு SIDE DISH களை பரிமாற வேண்டும். வீட்டில் உள்ளவர்களால் மட்டும் இதை செய்து கொண்டிருக்க
முடியுமா? அதற்கு மற்றவர்கள் முன்னால் சென்று உதவ வேண்டும்.
இந்த 'தானே சென்று உதவும்' பண்பு தேவை என்பதற்குத்தான் "பந்தியிலே முந்தி" இருந்து பரிமாற வேண்டும் என்று கூறப்பட்டிருக்க வேண்டும்.
அது சரி, "படைக்கு பிந்து" என்பதில் வேறு என்ன கருத்து இருக்க முடியும்?
படையெடுப்பு என்றால் வீட்டுக்கு ஒருவரை வாழ்த்தி திலகமிட்டு அனுப்பும் வீர பரம்பரை அல்லவா நம்முடையது. வீரம் என்பது ஆணின் அழகுக்கு இலக்கணமாக கூறிய சமுதயம் அல்லவா? பின் ஏன் படைக்கு பிந்த வேண்டும்?
படைகளில் பல பிரிவு உண்டு. அதில் முன்னர் செல்வது காலாட்படை. அதைத்தொடர்ந்து குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை எனச்செல்லும். முதலில் செல்லும் காலாட்படையில் ஆட்கள் அதிகம். அவர்கள் எதிரியால் தாக்கப்பட்டாலும், பின்னர் வரும் தேர்படைகளில் இருக்கும் வீரர்கள் வெற்றி வாகையினைத் தேடித்தருவார்கள். தேர்படையில் இடம் பெற பல போர்களைக் கண்டு, வீரத்தை நிறுபித்து இருக்க வேண்டும்.
சாதரண வீரர்களுக்கு அதில் இடமில்லை.
நாம் காக்கைக்கு சோறு போட்டு சோதித்து விட்டு சாப்பிடுவதில்லையா?
சாப்பாட்டில் விஷமிருந்தால் தெரிந்து விடும். காக்கையை விட நமது உயிரை மேலாக மதிப்பதினால் தானே அப்படி செய்கிறோம். அது போல வெறும் 'காக்கை வீரர்களாய்', 'வெறும் காலாட்படை' வீரனாக இருந்தால் மட்டும் போதாது, வீரத்தையும் திறமையையும் காண்பித்து பின்னால் வரும் தேர் படைகளில் இடம் பிடிக்க வேண்டும் என்பதை குறிப்பதே "படைக்குப் பிந்து" என்பது.
இதிலிருந்து அந்த பழமொழியின் உண்மையான பொருள், தற்போது நாம் நினைப்பது போல் இருந்திருக்காது என்பது தெரிகிறது அல்லவா!
9 கருத்துரைகள்:
"பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து" என்ற பழமொழிக்கு எங்க தமிழாசிரியர் வேற ஒரு விளக்கம் கொடுத்தாருங்க.
பந்திக்கு முந்துன்னா, பந்தியில உட்கார்ந்து சாப்பிடும் போது முன்புறமா சாய்ந்து(குனிந்து) சாப்பிடனும். இல்லைன்னா சாப்பிடும் உணவு, உடை மேலே விழும்.
படைக்கு பிந்துன்னா, பளுவான ஆயுதத்தை ஏந்தி படையில் செல்லும் போது தலையை பின்னோக்கி சாய்த்து (நெஞ்சை முன் செலுத்தி) செல்வது எளிது. இல்லைன்னா நிதானம் தவறிடும்.
இது தான் "பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து"ன்னாரு
அந்த விளக்கம் கூட அருமையா இருக்குங்க கோபி. நான் ஒரு பக்கம் எழுதி சொல்ல வந்த கருத்த ஓரிரு வரிகளில் கூறிட்டார் பாருங்க! தமிழ் ஆசிரியர் ஆச்சே ! எப்படினாலும் அந்த பழமொழியின் உண்மையான பொருள், தற்போது நாம் நினைப்பது போல் இருந்திருக்காது! சரிதானே
இப்ப இதுக்குப் பதில் சொல்ல நேரம், இல்லை. அங்கே இலை போட்டாச்சாம். முந்திக்கிறேன்:-)))
டீச்சர்! நீங்க இதுக்கு ஏதேனும் புது விளக்கம் தருவீங்கன்னு நினைச்சிகிட்டு இருந்தா, ஏமாத்திட்டீங்களே!. சரி நீங்க பிந்தி வந்து முந்தி போனாலும் வந்து போனீங்களே அதற்கு நன்றி.
Nice writing.. your writing itself is like a wedding feast.
என் வீட்டு விருந்துக்கு வந்ததிற்கும், பின்னூட்டம் தந்ததிற்கும் நன்றி 'delphine'
நல்ல விளக்கம் மதி.நீங்கள் சொல்வதில் இன்னும் ஒன்று விட்டுப்போய் விட்டது.
பணப்பை சரி. வீடியோவுக்குப் போஸ் மறந்து விட்ட்டீர்களே?
எங்கள் வீடுகளில் ஒரு நளபாகம் தெரிந்தவரைப் பந்தி விசாரிக்க என்று போடுவார்களாம்.
அவசர யுகம் என்றாலும் உபசாரம் குறைந்தது யோசிக்க வேண்டியதுதான்.பெரியவர்கள்,வயதில் மிக மூத்தவர்களைக் கண்டிப்பாகக் கவனிக்க வேண்டும். நன்றி.
வாங்க மனு,
உங்களப் போல பொரியவங்க வலைப் பக்கம் வருவதை பெருமையா நினைக்கிறேன். அதுவும் பின்னூட்டம் தந்தது மகிழ்ச்சியா இருக்கு.நன்றி. நீங்க சொன்னமாதிரி வீடியோவிற்கு போஸ் கொடுக்கிறததான் முக்கியமா கருதிகிட்டு வர்ரவங்களை வரவேற்க கூட நேரமில்லாமதான் இருக்கங்க ரொம்ப பேர்.
நண்பர்களே, பந்திக்கு முந்து படைக்குப் பிந்து என்ற பழமொழிக்கு புதிய விளக்கத்தை கீழே உள்ள சுட்டியில் படித்து மகிழலாம்.
http://thiruththam.blogspot.com/2010/10/blog-post.html
அன்புடன்,
தி.பொ.ச.
Post a Comment