06.மெய்ப் பொருள் காண்பதறிவு - 2


மெய்ப் பொருள் காண்பதறிவு - 2

"களவும் கத்து மற" இந்தப் பழமொழியை பல நேரங்களில் நாம் சொல்லியிருப்போம். ('கற்று' என்பது 'கத்து' என்று பேச்சுவழக்கில் சொல்லப்படுகிறது). முக்கியமாக மாணவர்களிடம், அவன் வேண்டாம் என்று சொல்லும் சப்ஜெக்டை படிக்க வைக்க டானிக்காக இந்த வார்த்தைகளைப் பயன் படுத்துவோம். ( அதே சமயம் அவன் வேண்டாத பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும் போது நாம் தண்டிக்கப் போனால் அவனும் அதே அஸ்திரதைப் பயன் படுத்தி தப்பிக்கவும் பார்க்கலாம்).

நாம் புரிந்து கொண்டிருக்கும் பொருள்,"திருட்டுத் தொழில் இழிவானது, என்றாலும் அதனையும் கற்றுக் கொள்ள வேண்டும், பிறகு மறந்துவிட வேண்டும்" என கற்றுக் கொள்வதின் சிறப்பினை விள்க்கும் பழமொழியாகத்தான்.


களவு இழிவானது என்றுத் தெரிந்தும் ஏன் அதனை கற்க வேண்டும்?

கற்றலைப் பற்றி சொல்ல வந்த வள்ளுவர் "கற்பவை" என்று கற்க வேண்டியதை மட்டும் கற்க என்றார். பின் "நிற்க அதற்கு தக" என்றுதான் கூறினார். மறக்கச் சொல்லவில்லை. அதோடு மட்டுமல்லாமல் "கள்ளாமை" பற்றி ஒரு அதிகாரமே எழுதியுள்ளார்.


என்வே இழிவான, தேவையில்லாத ஒன்றை ஏன் கற்க வேண்டும், பிறகு அதை மறக்க வேண்டும்?


சாதரணமாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று படித்தாலே நாம் எந்த லட்சணத்தில் படிக்கிறோம் என்று தெரியும். இதில் மறந்திட வேண்டும் என்று படித்தால் எப்படி?

எனவே அதன் உண்மைப் பொருள் "களவு அகத்து மற" என்றுதான் இருந்திருக்க வேண்டும். அதாவது களவினை மனதளவில் (அகம்) நினைத்துக் கூடப் பார்க்காதே, மறந்துவிடு என்பதாகும்.

மற்ற கூடா ஒழுக்கங்களான 'கொலை', 'பிறன் மனை நோக்குதல்', 'சூது', 'மது'போன்ற பழிச்சொல் ஏற்பவற்றில் களவும் ஒன்று, அதனையும் மறக்க வேண்டும் என பொருள் படும் படி "களவும் அகத்து மற" என மாறி, பின் காலப்போக்கில் 'அ' மறைந்து தற்போதய வடிவமான "களவும் கத்து மற"என மாறியிருக்கலாம்.

ஒரு காற்புள்ளி இடம் மாறியதனால் பொருள் எதிர் மறையாகி ஒரு உயிரே பறிபோன கதை ஞாபகம் இருக்கிறதல்லவா? மறந்தவர்களுக்காக அக் கதை மீண்டுமிங்கே:


ஆங்கிலேயர் காலத்தில் ஒருவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அவன் மூலம் 'கருணை மனு' அப்போதய வைசிராய்க்கு அனுப்பப்பட்டது. அவரும் 'கருணை மனுவை' பரிசீலித்து மரணதண்டனை வேண்டாமென தீர்மானித்தார். அதனை அப்பொழுதய வழக்கப் படி தந்தி மூலம் "HANG HIM NOT, LEAVE HIM" என்று அடித்து அனுப்பினார்.


எதிர் முனையில் அதனை பெற்று எழுதியவன்,
"HANG HIM, NOT LEAVE HIM" என்று கமாவை மாற்றிப்போட்டு டெலிவரி செய்தார். அந்த அப்பாவி கைதியின் முடிவு என்ன ஆகி இருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா?


எழுத்துக்களின் புணர்ச்சி விதி இல்லாத ஆங்கிலத்திலேயே ஒரு கமா செய்தியை எதிர் மறை ஆக்குமெனில்,தமிழில் கேட்கவா வேண்டும்.


எனவே "களவு அகத்து மற" என்பதே பழமொழியாக இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது அல்லவா.

3 கருத்துரைகள்:

said...

ஏங்க வள்ளுவர்,

// "கள்ளாமை//
இப்படி ஒரு அதிகாரம் போட்டுட்டாரா?

கல்லாமை
கள்ளாமை

இதுலே எந்த ஆமை சரியான ஆமை?

said...

முதல் பின்னூட்டத்துலே முதல் வரியிலே கமா வை மாத்திப் போட்டுருக்கேன்:-)))))

said...

வாங்க டீச்சர், உங்களைத்தான் எதிர் பார்த்தேன். மற்றவர்கள் பார்வைக்குப் போகும் முன் நீங்க தப்பை திருத்திட்டீங்கன்னா பல பேர் இடியுரைகளிளிருந்து தப்பிக்கலாம் பாருங்க!

ஆனாலும் திருக்குறளில் இரண்டு ஆமையும் வருது பாருங்க
அதிகாரம் 29: கள்ளாமை, அதிகாரம் 41: கல்லாமை. நான் சரியாச் சொல்லி இருக்கேனுங்களா?

(கமாவை மாத்திப் போட்டு உயிர் போன கதைதான் நான் சொன்னது, ஆனா நீங்க கமாவை மாத்திப் போட்டு என்னை வள்ளுவர் ரேஞ்சுக்குல்ல உயர்த்திட்டீங்க, இருங்க காலரைத் தூக்கி விட்டுக்கிறேன்)

Related Posts with Thumbnails