23.புத்தாண்டு சபதம்







ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும் போதும்,இந்தவருஷம் 'இதைச் செய்யனும்', 'இதைமுடிக்கனும்','இதை செய்யக்கூடாது' என்று ஏதாவது ஒரு குறிக்கோள்(சபதம்) செய்யறது உண்டு.ஏதோ "புதுப் பொண்டாட்டி" கதையா ஆரம்பத்துல சபதத்தை கடைபிடிச்சுட்டு, ரொம்பப் பெருமையா எல்லார்கிட்டயும் சொல்லிகிட்டுத் திரிவோம். கொஞ்சநாளான்னப் பின்னாலே "பழையக்குருடி கதவத்திறடி"ன்னு யதார்த்த வாழ்க்கைக்கு திரும்பிடுவோம். மத்தவங்க கேட்டா அதுக்கு ஏதாவது காரணத்த உண்டாக்கி சொல்லிடுவோம்.

அதனால இந்த புது வருஷத்துக்கு எந்த சபதமும் எடுக்கக் கூடாதுன்னு சபதம் எடுத்திருக்கேன்.

இருந்தாலும் மனசுக் கேக்கல ஏதாவது புதுசா செய்யனும்னு உறுத்திகிட்டே இருந்திச்சு. சரி டைரி எழுதலாம்னா அதுவும் முன்ன சொன்ன மாதிரி 'சுறு சுறுப்பா' ஆரப்பிச்சு'கடு கடுப்பா' முடிஞ்சுடும். என்ன பண்ணலாம்னு யேசிச்சப்பதான் ஒரு ஐடியா தோணிச்சு.

இன்னும் இந்த ப்ளாக்க, புது ப்ளாக்கருக்கு மாத்த தைரியம் வரலை. புது வீட்ல நிறைய பிரச்சனைகள்னு பேசிக்கிறாங்க. அதனால புது ப்ளாக்கர்ல, புது வருஷத்துக்காக, புது ப்ளாக் ஒண்ணு ஆரம்பிச்சு வெள்ளோட்டம் பாத்துட்டு அப்பறமா மாறிக்கலாம்னு'வலைக்காட்சின்னு' ஒரு புது தளத்த ஆரம்பிச்சுட்டேன்.

ப்ளாக்கர ஆரம்பிச்சுட்டு தமிழ்மணத்திலயும், தேன் கூட்லயும் சேர்க்க முடியாம எல்லாரப்போலவும் இப்போ தவிச்சுகிட்டு இருக்கேன்.

'எண்ணச்சுவடியில' எழுதறத்துக்கே நேரம் கிடைக்கல (சரக்கும் ஒண்ணும் இல்லங்கிறது வேற விஷயம்) இதுல புது ப்ளாக்ல என்னச் செய்யன்னு யோசிச்சு கடைசியா இப்படிஒரு காரியம் செய்து வச்ச்சிருக்கேன்.



இதையே அழைப்பா ஏற்று அங்கேயும் ஒரு நடை போய் பாத்துட்டு வந்துடுங்க.அப்படியே"வலைக்காட்சி"ங்கற பெயர் காரணத்தயும் தெரிஞ்சுக்கலாம்.

சரி ஏதோ வாழ்த்து சொல்வான்னு நினைச்சா விளம்பரம் பண்ணிகிட்டு இருக்கானேன்னு நினைக்காதிங்க.

செல்வமும், செழுமையும் கொழிக்கட்டும்
நலமும் வளமும் வளரட்டும் என புத்தாண்டு வாழ்த்துக்களை அனைவருக்கும் உரித்தாக்குகிறேன்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.







22.புத்திசாலிப் பூனை - 1

புத்திசாலிப் பூனையின் சாமார்த்தியத்தைப் பாருங்கள்.




தன் வினைதன்னைச் சுடும் என்பது தெளிவாகிறதா.

21.NEWS and VIEWS

Photobucket - Video and Image Hosting


NEWS


ரேஷன் கடையில் விமான டிக்கெட்

அகமதாபாத், டிச. 20:

ஜெட் ஏர்வேஸ் விமான டிக்கெட்டை விரைவில் குஜராத் ரேஷன் கடைகளிலும் வாங்கலாம்.

(நன்றி: தினகரன்)


VIEWS

சரி இதாவது அளவு குறை இல்லாம முழுசா கிடைக்குமா?

இனி படிச்சுட்டு ரேஷன் கடையிலப் போய் நிக்கிறதான்னு வெக்கப்பட்றவங்களுக்கு கவலையில்லை. கேட்டா Flight டிக்கெட் வாங்க வந்தேன்னு பந்தாவா சொல்லிக்கலாம் (மஞ்சப் பைய மடிச்சு பாக்கெட்ல வச்சுகிட்டுதான்)

Photobucket - Video and Image Hosting
NEWS

வீடு தேடி வருகிறது ரயில் டிக்கெட்

புதுடெல்லி, டிச. 20:

பயணிகள் வசதியை அதிகரிக்கும் வகையில் ரயில் டிக்கெட்டை வீடு தேடிச் சென்று அளித்து, பணம் பெறும் திட்டம் புத்தாண்டில் டெல்லியில் அறிமுகம் செய்யப்படுகிறது.

(நன்றி: தினகரன்)


VIEWS

டிக்கெட்ட வீட்ல வந்து கொடுப்பாங்க சரி, வீட்லேந்து ஸ்டேஷன் வரைக்கும் கூட்டிட்டுப் போறதுக்கு ஆட்டோ அல்லது பஸ்ஸ வீட்டுக்கு எப்ப அனுப்பப்போறாங்க?

Photobucket - Video and Image Hosting
NEWS

சினிமா டிக்கெட் கட்டணம் குறைப்பு! ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசு

சென்னை, டிச. 20-

சினிமா ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசாக, தியேட்டர் கட்டணத்தை குறைத்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

(நன்றி: தமிழ் முரசு)


VIEWS

அதை விட, டீ.வி தான் இலவசமா கொடுத்தாச்சே, பேசாம படத்த தியேட்டர்ல ரிலீஸ் பண்ணாம டீ.விலேயே ரிலீஸ் பண்ணச் சொல்லி உத்தரவு போட்டா நல்லா இருக்கும்




20.வேடிக்கையும் வினோதமும்

திருமண மண்டபங்களிலும் கோவில்களிலும் செருப்பு திருட்டுப் போய் விடுவது உண்மைதான்,முன் ஜாக்கிரதையும் பாதுகாப்பும் தேவைதான். அதுக்காக இப்படியா? ( வேடிக்கை )



சுற்றுப்புற சூழ்நிலயில் எங்களுக்கும் அக்கறை உண்டு.( வினோதம் )




19.தமிழில் டைப்செய்ய


தமிழில் டைப்செய்ய



கொல்லர் தெருவில் ஊசி விற்ற கதையாக IT வல்லுனர்கள் நிறைந்த வலைத்தளத்தில், இது தேவையில்லாத பதிவுதான். அதுவும் ஒரு சிறு துறும்பு கூட சொந்த சரக்கு இதில் இல்லை. சுரதா அவர்களின் சரக்கை அனுமதியுடன் வாங்கி க்ருபா உபயோகப் படுத்தி இருந்ததை வெட்டி, ஒட்டி, அட்டைப்பெட்டியில் அடைத்து எடுத்து வந்திருக்கிறேன்.


மேலே உள்ள Linkகை கிளிக் செய்யவும். Open ஆகும் பக்கத்தின் கீழே உள்ள Download பட்டனை கிளிக் செய்து Html file ஆக Save செய்யவும்.

Notepad ஆக downloadஆனால், Menuவில் File - saveas ஐ கிளிக் செய்யவும். File name பகுதியில் .html சேர்த்து Tamil Writter.html என்று டைப் செய்யவும். Encoding பகுதியில் arrow ஐ கிளிக் செய்து UTF-8ஐ தேர்ந்தெடுத்து Desktop அல்லது My Documentல் Save செய்யவும்

அவ்வளவுதான் உங்கள் தமிழ் ரைட்டர் ரெடி.

இதன் சிறப்பு:

நீங்கள் Onlineல் இல்லாத போதும் உபயோகப் படுத்தலாம்.

இதை install செய்யத் தேவையில்லை.

இந்த fileஐ flash driveல் save செய்து எந்த கணனியிலும் உபயோகப்படுத்தாலாம்.

சிலருடைய கணனியில் security settingleல் popupblocker ஆல் தடை செய்யப்பட்டுருப்பதாக காட்டினால் information bar ஐ கிளிக் செய்து "Allow blocked content" ஐ தேர்ந்தெடுத்து OK கொடுக்கவும்.

இதன் பிறப்பு:

"ஈகலப்பை இல்லாத நேரங்களில் நம்ம வசந்தன் போன்றோரின் பதிவில் இருக்கும் மொழிமாற்றியைத்தான் நான் உபயோகிக்கின்றேன். நீங்களும் செய்யலாமே"என்று இலவச கொத்தனார் விக்கிபசங்க கொட்டைப் பதிவின் பின்னூட்டத்தில் கூறி இருந்ததும்,

"நம்மட வலைபக்கத்திலியும் அந்தமாரி பொட்டி ஒன்னு போடமான்னு இருக்கன். வெளியூர் போன ரொம்ப உபயோகமா இருக்குங்கோ."என்று ஓகை கேட்டிருந்ததும்,

"வசந்தன் ஐயா, உங்களுக்கு விருப்பமானால் இதை ஒரு பதிவாகப் போட்டு விக்கி பசங்க வலைப்பூவிற்கு நீங்கள் தரலாமே?" என்று வசந்தன் அவர்களை கொத்தனார் கேட்டிருந்ததும்தான் இந்த பதிவை எழுதக் காரணம்.

என் கணனியில் நான் பயன் படுத்திவந்ததை அம்பலப்படுத்தி இருக்கிறேன்.

நிரல் தந்தவர்க்கும்,எழுத உரம் தந்தவர்களுக்கும் நன்றி!


Key Board Layout
Photo Sharing and Video Hosting at Photobucket

18.இணைய ஜோதிடம்!



மதுமிதா இணைய வாஸ்து பற்றி ஒரு பதிவு போட்டிருந்தாங்க. அவ‌ங்களுக்கான பின்னூட்டம் எழுதப்போயி அதுவே ஒரு பதிவு அளவுக்குப் போயிட்டதால அவ‌ங்க எடத்திலப் போயி வீடுகட்டறது வாஸ்த்துப் படி சரியில்லங்கறதால ந‌ல்ல நேரம் பாத்து ஒரு பின்னூட்டப் பதிவு.


இணைய வாஸ்து மட்டுமில்லீங்க,இணைய ஜோதிடம் கூட சொல்வாங்க. நீங்க வலை ஆரம்பிச்ச நேரத்தையும் தேதியயும் கொடுத்தாப் போதும். கணணியில பாத்து எப்பலாம் அனானிகள்கிட்டருந்து பின்னூட்டம் வரும், எந்த விளம்பரத்த வலையில போட்டா வருமானம் அதிகமாகும்னு சொல்வாங்க.


அத்தோட விட மாட்டங்க இங்கே இணைய அடி(!) ஜோதிடம் பார்க்கப் படும்னு விளம்பரம் வரும். உங்க இணைய பக்கத்தோட header அளவு, sidebar அளவு, body அளவு கொடுத்தீங்கன்னா எப்ப தேன்கூடு போட்டிக்கு கதை எழுதினீங்கன்னா ஜெயிக்கலானம்னு சொல்வாங்க.


அட இன்னொன்ன விட்டுட்டோமே!,அதாங்க எண் ஜோதிடம். உங்க தலைப்ப மட்டும் "காற்ற்று வெளி"ன்னு ஒரு 'ற்' சேர்த்து கற்றுக்கும் வெளிக்கும் இடையே காற்று வெளி விட்டீங்கன்னா, சும்மா புயல் கணக்கா பின்னூட்டம் பிச்சுகிட்டு போகும்னு கூட யோசனை கொடுப்பாங்க.


ஜாக்கிரத!இத எங்க பக்கத்து ஆளுங்க பார்க்க வேண்டாம்.ஏன்னா வைத்தீஸ்வரன் கோயில்ல ஒவ்வொரு வலைப் பேருலயும் ஓலைச்சுவடி இருக்குன்னு நாடி ஜோதிடம் பார்க்க ஆர‌ம்பிச்சுடுவாங்க‌.

அது சரி! மேல இருக்கிற படத்துக்கும் இந்தப் பதிவுக்கும் என்ன சம்பந்தம்னு பார்க்கிறீங்களா. இந்த கிளி ஜோதிடம் இல்ல, அது மாதிரி இது இணையத்துக்கான "நாய் ஜோதிடம்" பார்க்கிற முறைங்க.

17.உள்ளாட்சித்தேர்தல் சில சுவையான செய்திகள்




1) ஒரு ஓட்டு கூட வாங்காத அ.தி.மு.க. வேட்பாளர்


அனந்தபுரம் பேரூராட்சி வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. இதில் 6வது வார்டில் திமுக வேட்பாளர் சேகர் 144 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை அடுத்து சுயேச்சை வேட்பாளர் விக்டோரியா பாய் 131 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் அதிமுக வேட்பாளர் ஜோதி ஒரு வாக்கு கூட பெறவில்லை. அவர் போட்ட ஓட்டு கூட செல்லாத ஓட்டாகி விட்டது. ஓட்டு எண்ணிக்கைக்கு வந்திருந்த வேட்பாளர் ஜோதி தனக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லையே. தான் போட்ட ஓட்டு கூட கிடைக்கவில்லையே, அது என்ன ஆயிற்று என்ற சோகத்தில் இருந்தார்.

2) பஞ்சாயத்து தலைவர் தேர்தல் இறந்த பெண்ணுக்கு கிடைத்தது வெற்றி
முடிவு நிறுத்திவைப்பு


பஞ்சாயத்து தலைவர் தேர்தலில், இறந்த பெண் வேட்பாளர் வெற்றி பெற்றார். இதனால் அங்கு தேர்தல் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், மீரான்குளத்தைச் சேர்ந்தவர் சாது சுந்தர் சிங். இவருடைய மனைவி ஹெலன் ஜெசீலா (26). அ.தி.மு.க.வை சேர்ந்த சாது சுந்தர் சிங், மீரான்குளம் பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்து வந்தார். இந்த முறை இது பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால், தனது மனைவி ஹெலன் ஜெசீலாவை கட்டாயப்படுத்தி போட்டியிடச் செய்தார். இதற்கிடையே, விபத்தில் சிக்கி காயமடைந்ததாக ஜெசீலாவை சாது சுந்தர் சிங் மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், தேர்தலில் போட்டியிட மறுத்ததால், சாது சுந்தர் சிங் அவரை கடுமையாக தாக்கியதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில், அக்டோபர் 1ம் தேதி ஹெலன் உயிரிழந்தார்.
உள்ளாட்சி தேர்தல் வேட்புமனுக்களை வாபஸ் பெற செப்டம்பர் 30ம் தேதி கடைசி நாள். அக்டோபர் 1ம் தேதி ஹெலன் இறந்ததால் அவருடைய பெயரை வாக்குச்சீட்டில் இருந்து நீக்க முடியவில்லை. திட்டமிட்டபடி தேர்தல் நடந்தது.
நேற்றைய வாக்கு எண்ணிக்கையில், இறந்த வேட்பாளர் ஹெலன் வெற்றி பெற்றார். அவருக்கு 664 வாக்குகளும், எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் சக்தி கனி 496, கற்பகம் 346, ஜெயந்தா 110 வாக்குகளும் பெற்றனர்.
இறந்துபோன வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதால், மீரான்குளம் பஞ்சாயத்து தலைவர் தேர்தல் முடிவை நிறுத்தி வைப்பதாக வாக்கு எண்ணும் மைய அதிகாரி பழனி தெரிவித்தார்.
மறுதேர்தல் நடத்தப்படும்
மீரான்குளத்தில் இறந்த பெண் வேட்பாளர் வெற்றிப் பெற்றது குறித்து குறித்து தூத்துக்குடி கலெக்டர் பழனியாண்டியிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், உள்ளாட்சி தேர்தல் பணிகள் முடிந்ததும் அந்த பஞ்சாயத்துக்கு மறு தேர்தல்

3) வேலூர் நகராட்சியில் குலுக்கல் முறையில் தே.மு.தி.க. வெற்றி

வேலூர் நகராட்சி 11வது வார்டில், தே.மு.தி.க. வேட்பாளர் குலுக்கல் முறையில் வெற்றிபெற்றார்.
வேலூர் நகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை, தந்தை பெரியார் பாலிடெக்னிக்கில் நடந்தது. 11வது வார்டில் நடந்த ஓட்டு எண்ணிக்கை முடிவில், தி.மு.க. வேட்பாளர் ஜெயப்பிரகாஷ், தே.மு.தி.க. வேட்பாளர் பாலசுந்தரம் ஆகியோர் தலா 470 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர். இதனால் தேர்தல் ஆணைய விதிப்படி, குலுக்கல் முறையில் வெற்றியை நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது.
இரண்டு பெயர்களும் காகிதத்தில் எழுதி குலுக்கல் நடத்தப்பட்டது. அதில், ஒரு பேப்பரை எடுத்து பார்த்தபோது, தே.மு.தி.க. வேட்பாளர் பாலசுந்தரம் பெயர் இருந்தது. அதனால், அவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றிகுறித்து, தே.மு.தி.க. வேட்பாளர் கூறுகையில், “கடவுள் ஆசியால் வெற்றி பெற்றுள்ளேன். வார்டு மக்களுக்கு நல்லது செய்வேன்‘‘ என்றார்.

4) திட்டக்குடி குலுக்கலில் வென்றார் சுயேச்சை

திட்டக்குடி 3 வது வார்டில் மொத்தம் 682 ஓட்டுகள் உள்ளன. இந்த வார்டில் சுயேச்சைகளும் திமுக கூட்டணியில் பாமகவும் போட்டியிட்டன. இறுதி சுற்றில் அக்பர் 222 ஓட்டுகளும் தபால் ஓட்டு 1ம் வாங்கி மொத்தம் 223 ஓட்டுகள் வாங்கியிருந்தார்.
பாமக வேட்பாளர் அன்பழகன் 221 ஓட்டுகளும் தபால் ஓட்டு 2ம் வாங்கி அவரும் 223 ஓட்டுகள் வாங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து இரண்டு பேரின் பெயர்களையும் எழுதி போட்டு குலுக்கி வெற்றி பெற்றவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு தேர்தல் அதிகாரி கலாவதி வந்தார். அதற்கு பாமக வேட்பாளர் அன்பழகன் மறுப்பு தெரிவித்தார். இருந்தும் தேர்தல் விதிகளை எடுத்துக்கூறி கலாவதி அவரை சம்மதிக்க வைத்தார். குலுக்கலில் சுயேச்சை வேட்பாளர்

5) தோல்வி அடைந்ததால் வேட்பாளர் தற்கொலை

வேலு£ர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியம் இளையநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (எ) லட்சுமண சிங் (60). இளையநகரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து, அவருடைய தம்பி பீம்சிங் (50) போட்டியிட்டார்.
நேற்றைய வாக்கு எண்ணிக்கையில், பீம்சிங் 225 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். லட்சுமணசிங் 115 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதனால், வேதனை அடைந்த லட்சுமணசிங், அருகில் இருந்த வயலுக்குச் சென்று பூச்சி மருந்து குடித்தார். வாணியம்பாடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். வாணியம்பாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

6) எண்ணிக்கை மையத்தில் பரபரப்பு போலி சீட்டுடன் வந்த வேட்பாளர்

நாகர்கோவில் நகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை, எஸ்.எல்.பி. பள்ளியில் நேற்று நடந்து கொண்டிருந்தது. 24வது வார்டில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் அர்ச்சுணபாண்டியனும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் இருந்தார்.
திடீரென அவர் 4 வாக்குச் சீட்டுகளை தூக்கி காட்டி, எனது வார்டுக்குட்பட்ட வாக்குச் சீட்டுகள் கீழே கிடக்கிறது என்று புகார் கூறினார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் அவற்றை வாங்கி பார்த்தனர். இதில், அந்த வாக்குச்சீட்டுகள் போலியானவை என்பது தெரியவந்தது.
இதுகுறித்து நகராட்சி தேர்தல் பொறுப்பாளர் காதர்மொய்தீன் கூறுகையில், ‘‘சுயேச்சை வேட்பாளர் காட்டிய வாக்குச் சீட்டுகளில் போலியானவை. இவற்றில் நகராட்சி முத்திரையோ, தேர்தல் அதிகாரி கையெழுத்தோ இல்லை. இவை எப்படி அர்ச்சுண பாண்டியன் கையில் கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.

நன்றி: தினகரன்

16.விருந்து

தலைப்புல "புகைப்பட விருந்து"ன்னு எழுத நினைச்சு புகைப்படங்கிறது டைப் பண்ணும் போது விட்டுப்போச்சு. ஆனாலும் வந்த‌வங்கள ஏமாத்தக் கூடாது இல்லீங்களா? முதல்ல சாப்பாடு.



சாப்பாடு ஆச்சுங்க‌ளா? வாங்க‌ இப்ப‌டி கடற்கரை ஓரமா கொஞ்ச நேரம் காலாற‌ ந‌ட‌ந்துட்டு வ‌ர‌லாம்.



ச‌ரிவாங்க‌, ந‌ம்ம‌ வீட்டு ஜ‌ன்ன‌ல் வ‌ழியாவே அருவி தெரியுது பார்த்து ரசிங்க‌.





வெளியில‌ ம‌ட்டுமில்லீங்க‌, வீட்டுக்குள்ளேயும் ஒரு அருவி இருக்கு பாருங்க‌ளேன். இதை வேணும்னா "சிற்ற‌ருவி"ன்னு சொல்லிப்போம்.




ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாடியும் ஒரு பெண் இருப்பாங்க‌ங்கிற‌து நிஜ‌ம்தாங்க. இந்த சிப்பாய்க்குப் பின்னாடி யாரு இருக்காங்கன்னுப் பாருங்க‌.






அத‌ தெரிஞ்சுக்க‌ இந்த‌ப் ப‌ட‌த்த‌ கிளிக் பண்ணி தனி window ல போய் படத்த select பண்ணுங்க இல்லாட்டி control + A அழுத்துங்க‌.

ச‌ரி, உங்க‌ பின்னாடி இருக்கிற‌வ‌ங்க‌ளுகிட்ட‌ நீங்க‌ எப்ப‌டி"I Love You" சொன்னீங்க‌ளோத் தெரியாது, இவ‌ங்க எப்படி சொல்லிக்கிறாங்க பாருங்க.


15.சுயம்பு! (or குறும்பு)

நியூசிலாந்தின் 'கேவ் ராக்'கில் baywatch பிள்ளையாரை கண்டதாக துளசி டீச்சர் பதிவு செய்திருந்தார்கள். சுயம்புவாக பிள்ளையார் மட்டும்தான் தோன்றுவாரா என்ன? பாருங்கள் யார் யாரெல்லாம் சுயம்புவாகத் தோன்றி இருக்கிறார்கள் என்று. (இது சுயம்பா அல்லது photoshopன் குறும்பா என்பது தெரியாது.)






14.(பே)ய் மெயில்




இன்றய மின் அஞ்சலில் வந்த ஆங்கில ஜோக்கு ஒன்றை படித்து பல முறை ரசித்தேன். அதனை தமிழ் படுத்தி எழுதி படிப்பதை விட அப்படியே படித்தால்தான் நன்றாக ரசிக்க முடியும் என்பதால் இதோ அந்த ஜோக்கை ஆங்கிலத்திலேயே பதிவு செய்து விட்டேன்.




Ghost Mail

A man checked into a hotel. There was a computer in hisroom, so he decided to send an e-mail to his wife.

However, he accidentally typed a wrong e-mail address, andwithout realizing his error, he sent the e-mail.

Meanwhile....Somewhere in Houston, a widow had just returned from her husband's funeral.


The widow decided to check her e-mail, expecting condolence messages from relatives and friends.

After reading the first message, she fainted.


The widow's son rushed into the room, found his mother on the floor,
and saw the computer screen which read

To: My Loving Wife

Subject: I've Reached
Date: 26 Aug 2006

I know you're surprised to hear from me. They have computers


here, and we are allowed to send e-mails to loved ones.

I've just reached and have been checked in.

I see that everything has been prepared for your arrival tomorrow.

Looking forward to seeing you TOMORROW!

Your loving Hubby

13.வார்த்தைகளின் வரிசை



"ஒன்று, இரண்டு, மூன்று என, எம்மை வரிசைப் படுத்திப் பாடுக"என்று முருகன் ஓளவையாருக்கு இட்ட கட்டளைக்கு 'ஒன்றானவன்..' என்று அவர் பாடியதைப் போல, ஆங்கிலத்தில் ஓர் எழுத்து, ஈரெழுத்து வார்த்தைகளை அமைத்து, அதன் மூலம் அறிவுரையும் சொல்லப் பட்ட மின் அஞ்சல் ஒன்று நேற்று வந்தது. என்னை மிகவும் கவர்ந்த அந்த மடல் இதோ:


The most selfish ONE letter word -“I”, Avoid it

The most satisfying TWO letter word -“WE”, Use it.

The most poisionous THREE letter word - “EGO”, Kill it.

The most used FOUR letter word- “LOVE”, Value it.

The most Pleasing FIVE letter word-“SMILE”, Keep it.

The fastest spreading SIX letter word- “RUMOUR, Ignore it.

The hardest working SEVEN letter word “SUCCESS”, Achieve it.

The most enviable EIGHT letter word “JEALOUSY”, Distance it.

The most powerful NINE letter word “KNOWLEDGE”,Aquire it.

The most essential TEN letter word “CONFIDENCE”,Get it.

12.பசு

பசு

மின் அஞ்சலில் வந்த, நான் ரசித்த ஆங்கில ஜோக் இது. இதை படித்து முடிக்கும்போது ஓரளவிற்கு கற்ற ஆங்கிலம் மறந்து போனால் நான் பொறுப்பு அல்ல.


This is a true essay written by a candidate at the UPSC (IAS) Examinations.

The candidate has written an essay on the Indian cow:


Indian Cow

HE IS THE COW. "The cow is a successful animal. Also he is 4 footed. And because he is female, he give milks, [but will do so when he is got child.]

He is sacred to Hindus and useful to man. But he has got four legs together. Two are forward and two are afterwards. His whole body can be utilised for use.
More so the milk. Milk comes from 4 taps attached to his basement.[horses dont have any such attachment] What can it do? Various ghee, butter, cream, curd, why and the condensed milk and so forth. Also he is useful to cobbler, watermans and mankind generally.

His motion is slow only because he is of lazy species. Also his other motion.. [gober] is much useful to trees, plants as well as for making flat cakes[like Pizza], in hand, and drying in the sun.
Cow is the only animal that extricates his feeding after eating. Then afterwards she chew with his teeth whom are situated in the inside of the mouth. He is incessantly in the meadows in the grass.
His only attacking and defending organ is the horns, specially so when he is got child.

This is done by knowing his head whereby he causes the weapons to be paralleled to the ground of the earth and instantly proceed with great velocity forwards.
He has got tails also, situated in the backyard, but not like similar animals. It has hairs on the other end of the other side. This is done to frighten away the flies.

------*-----

We are informed that the candidate passed the exam.and is now an IAS, in Bihar!!!!!!!!

11.காதல்

காதல்

காதல் என்பது குறித்து இவர்களிடம் கருத்துக் கேட்டால் என்ன பதில் கூறுவார்கள் என்று கற்பனை செய்த போது வந்தது இது. மற்றபடி யாரையும் புண்படுத்துவதற்காக‌வோ, கேலி செய்வதற்காகவோ இல்லை எனப‌தினை ஆரம்பத்திலியே சொல்லிக்கொள்கிறேன். அத்துமீறலாக உணர்ந்தால் மன்னித்துக் கொள்ளவும்.


முதலில் அரசியல் வாதிகளிடமிருந்து ஆரம்பிப்போம்.

கலைஞர்:
காதல் என்பது காத‌லியின் மனக் கோட்டையிலே முதல்வராக அமர்வது. அத‌ற்காக‌ கலர் லிப்ஸ்டிக், கலர் சேலை போன்ற‌வ‌ற்றை இலவசமாகத் த‌ருவதாக‌ அறிவிக்கலாம்.காதலிக்க வேண்டுமானால் கூட்டு சேர்ந்துக் கொள்ளலாம். ஆனால் மனதில் இடம் பிடிக்கும் போது கூட்டாட்சிக் கூடாது.

ஜெயலலிதா:
காதலில் வெற்றித் தோல்வி என்பது சகஜம். தோற்றாலும் நாம் காதலரை சந்தித்த நாட்களின் சதவிகிதத்தை கணக்குப் போட்டுப் பார்த்தால், வெற்றி பெற்றவரை விட அதிகமாகத்தான் இருக்கும். அதற்காக யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம். அப்படி இது வரை காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டவர்களின் குடும்பத்திற்கு 1 லட்சம் ரூபாய் கட்சி நிதியிலிருந்து அளிக்கப் படும்.

வை.கோ:
எப்படியும் சட்ட சபையில் சாரி! சாரி! மனதில் இடம் பிடித்திட வேண்டும் என்று, அவர்கள் கொடுத்த இன்னல்களை எல்லாம் மறந்து சரண் அடைந்து விடுவதுதான் காதல். அதற்காக மேடைப் போட்டு பேசி பேசியே ஆதரவு திரட்டலாம்.

விஜயகாந்த்:
ஒரே ஒரு மனதில் இடம் பிடித்திருந்தாலும், நம்மை தேர்வு செய்தவர்களுக்காக உழைத்து அவர்கள் வள‌ர்ச்சிக்குப் பாடுபடுவதே காதல். அவர்கள் மனதில் கேப்டனாக இடம் பெற எப்படி நடித்தலும் பரவாயில்லை.

அடுத்து திரைப்படத்துறையினர்

பாரதிராஜா:
என் இனிய தமிழ் மக்களின் மண்வாசனை. கல்லுக்குள் உண்டகும் ஈரம். 16 வயதினிலே ஏற்படும் கடலோர கவிதைகள். சிகப்பு ரோஜாக்களை கொடுத்து, தாஜ்மஹாலை வளைக்கும் மந்திரம். புதிய வார்ப்புகளின் வாலிப விருந்து.புது நெல்லுக்கும் புது நாத்துக்கும் உள்ள உறவு.

விஜய T.ராஜேந்தர்:
ஆணுக்கும் பெண்ணுக்கும் வருவது காதல்
ஆரம்பமாகும் இடமோ இருவரின் மோதல்
அது கைக் கூடவில்லை எனில் சாதல்
அல்லது இருவரும் இணைந்து ஒருவராய் ஆதல்.

ரஜனிகாந்த்:
இது பற்றி இப்போது எதுவும் கருத்து சொல்லக் கூடாது. சிவாஜி படம் முடியும் வரை எதையும் பேச விரும்பவில்லை. அதற்குப் பிறகு இமயமலை அடிவாரம் சென்று ஓய்வெடுத்து லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக கருத்தைச் சொல்கிறேன்.

கம‌ல்:
காதல்‍. ஒரு நல்ல விஷயந்தான். அது மருதநாயகம் மாதிரி ஜவ்வாக இழுத்துக்கொண்டு இருக்கவும் கூடாது, மும்பை எக்ஸ்பிரஸ் மாதிரி வந்ததும் தெரியாமல் போவதும் தெரியாமல் போகவும் கூடாது. காதல் பெயரில் ஏற்கனவே திரைப்படம் வந்து விட்டதால் அந்த சப்ஜட்டுக்கு ஏற்ற பிரச்சனை ஏற்படுத்தாத தமிழ் தலைப்பு தேடிகிட்டு இருக்கிறேன். அது கிடைத்ததும் துவக்க விழாவுக்கு டோனி பிளேயரை அழைக்கலாமென்று இருக்கிறேன்.

சிம்ரன்:
காதலுக்கு எல்லாரும் ஓட்டுப் போடுங்கோ. நான் இன்னும் அம்மாவைத்தான் லவ் பண்ணுது. எங்க அம்மாவை இல்லே, ஜெயா அம்மாவை.காதல் சின்னமாக ஹார்ட்டை எடுத்துட்டு ரெட்டை இலையை வச்சா , விரல காமிச்சு ஓட்டு கேட்க ஈஸியா இருக்கும்.

குஷ்பு:
திருமணத்திற்கு முன்பு பெண்கள் காதல் செய்வது த‌ப்பு, த‌ப்பு,மகா தப்பு. (ச‌ரின்னு சொல்லி, இதுக்கும் கோர்ட் கேஸுன்னு நம்பலால அலைய முடியாதுப்பா. ஆள விடுங்க)

வைரமுத்து:
அது ஓர் இனிய அனுபவம்.
அது இளமையின் வைபவம்.
கரிசல் காட்டின் காவியம்.
தண்ணீர் தேசத்து ஓவியம்.

சுஜாதா:
ஆணின் மூளை யிலுள்ள நியூரான்களில் ஒரு குறிப்பிட்ட பெண்ணைக் கண்டதும் சுரக்கும் ஒருவித chemicalலினால் ஏற்படும் மின் அதிர்வே காதல்.


பேச்சாளர்கள்

சாலமன் பாப்பையா:

வாங்க அப்பு! "காதல்" நல்ல அருமையான தலைப்பத்தான் கொடுத்திருக்காக. காதல்- இனக்கவர்ச்சியா, மனக்கவர்ச்சியான்னு நம்ம ராஜாவையும், பாரதி பாஸ்க‌ரையும் வச்சி ஒரு பட்டி மன்றம் நடத்தி பொங்கல் அன்னைக்கு சன் டீவில போட்டுடலாம்.


சுகிசிவம்:
காதல் ஒரு புனிதமான சங்கதி. நமது புராணங்களிலே பல இடத்தில் பேசப்படுவது. உங்களுக்கு சுலபமாக புரிந்து கொள்ள ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன் கேளுங்க! முருகனுக்கு பெற்றோர் பார்த்து தேவயானியை திருமணம் செய்து வைத்தார்கள். அது arranged marriage ஆனால் முருகன் வள்ளியை காதலித்து மணந்து கொண்டார். இதிலிருந்து நான் என்ன சொல்ல வர்றேன்னு புரியுதா உங்களுக்கு.

Mr.(சென்னை)பொது ஜனம்:
என்ன கஸ்மாலம் அது மாமூ ! ஐய்ய, லவ்வைப்பத்தி கேட்டுகினியா. அப்படி புய்யும் படியா தமிழ்ல‌ கேளு நயினா! லவ்வுன்னா ஃப்கரை டாவு அடிச்சிகினு, கடல போடுறதான் மச்சி. சப்பமேட்டரு!இதுக்குப் போயி மீனிங் கேட்டுகினு கீற!

வலைப்பதிவாளர்களை மட்டும் விட்டு வைப்பானேன்.

டோண்டு:
காதல் என்று கூறிக்கொண்டு பின்னோட்டத்தில் வருகிறவர்களில் போலியின் தொல்லைத் தாங்க முடியாது. இந்த போலிகளை அடையாளம் கண்டு கொள்ள பூனைக் குட்டி சோதனை உள்ளது.அதனை தெரிந்து கொள்ள கீழ்கண்ட url கிளிக் செய்யவும்.
http://poonaikuty_soothani/dontoo. html

மாயவரத்தான்:
காதலிப்பவர்களின் வேதனைகள் தொடங்கி விட்டது. காதல், காதல் என்று சொல்லிக் கொண்டு சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர்களின் லீலைகளைப் பற்றி தின மலரில் வரும் செய்திகளை உள்குத்து இன்றி நடு நிலமையாக விமர்சித்து பதிவு இடுவேன்.காதல் செய்யும் போது கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் திருமணம் ஆன பின் நிறைவேற்றுகிறார்களா என பார்க்கவேண்டும்.

(இனியதளம்) கோகுல் குமார்:
காதல் செய்பவர்களுக்கு வசதியாக, காதல் மின்கடிதம் எழுதவும், காதலியை யாருக்கும் தெரியாமல் சந்திக்கும் தந்திரங்கள் பற்றியும் இந்த தளத்தில் இலவசமாக ஆலோசனைகளைக் காணலாம்.

காசி ஆறுமுகம்:
காதல் பற்றி தெரியாதவர்களுக்கும், புதிதாக முத‌ன்முதலில் காதலிப்பவர்களுக்கும் வசதியாக, " உன் பாடு, என் பாடு, நம் அப்பன் பாடு" "தமிழில் காதலிக்கலாம் வாருங்கள், வலையில் சிக்கலாம் பாருங்கள்"என்ற நகைச்சுவையும், நுட்பமும் அடங்கிய கட்டுரைகளைக் காண இங்கே 'கிளிக்'கவும்.

துளசி கோபால்: காதல் part-1
நியூசிலாந்தில் முன்பு அங்குள்ள ஜோடிகள் அடிக்கடி சொல்லிக் கொள்ளும் ஆங்கில வார்த்தையின் தமிழ்ச் சொல்அது. இப்படித்தான் ஒரு முறை நாங்கள் காரில் சென்று கொண்டு இருக்கும் போது எதிரில் ஒரு கார் வேகமாக எங்களை கடந்து சென்றது. பார்த்தால் அந்தக் காரிலும் ஒரு ஜோடி. அவர்களும் காதல் ஜோடியாகத்தான் இருக்கவேண்டும். எங்களை கடந்து சென்ற கார் திடீரென நின்றது.
(காதல் part-2 அடுத்த பதிவில்)

கோபி (Gopi) :
காதலர்கள் ப‌ரிமாறிக்கொள்ளும் கடிதத்தில் இருக்கும் fontஐ unicodeல் மாற்றி வாசிப்பத‌ற்கான Toolஐ எனது ப்ருந்தாவனத்தில் காணலாம்.

நாமக்கல் சிபி:
நயன்தாராவிடம் கருத்து கேட்க்கப்படாததினால், நானும் கருத்து கூறப் போவதில்லை.

(எண்ணச்சுவடி) மதி:
மெய்ப்பொருள் காண்பது அறிவு 14(Feb)
காதல் என்பது திருமணம் செய்துக் கொள்ளத்தானே."கல்யாணம் பண்ணிப் பார், வீட்டைக் கட்டிப் பார்" என்ற பழமொழி நாம் நினைப்பதைப் போல திருமணத்தை நாமே செய்து கொள்ளவோ அல்லது திருமணத்தை நாமே நடத்திப் பார்க்க வேண்டும் என்பதோ அல்ல. மற்றவர்கள் கல்யாணம் ப‌ண்ணிக் கொள்வதை, தூர இருந்து பார் என்பதே சரியாக இருந்திருக்கும்.

ஜெயக்குமார்:

"........................................"(posting deleted) வந்த comment போலியினுடையது என்று ஒரிஜினல் ஜெயக்குமார் புகார் கூறியதால் நீக்கப்பட்டது.

10.மெய்ப்பொருள் காண்பதறிவு - 3



மெய்ப்பொருள் காண்பதறிவு - 3


"பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து" என்ற பழமொழியை திருமண வீட்டில் அடிக்கடி கேட்டிருக்கலாம்.
எங்கே கடைசி பந்திக்குப் போனால் ஜாங்கிரியும், மைசூர்பாகும் தீர்ந்து விடப் போகிறதோ என்ற கவலையும்; ரசமும்,மோரும் தீரத் தீர, நீர்த்துப் ( தண்ணீர் விட்டு பெருக்கிக்கொள்வதால்) போய்விடும் கவலையிலும் முதல் பந்திக்கே போய் விட்டால் அனைத்தையும் ஒரு பிடி பிடித்து விடலாம் என்போரின் தாரக மந்திரம் அது.

ஆனால் நினைத்துப் பாருங்கள், விருந்தோம்பலில் புகழ்பெற்ற நம் தமிழ் நாட்டில், அதுவும் தமிழகம் செழித்திருந்த அந்த காலங்களில் இப்படி ஒரு கருத்தையா சொல்லியிருப்பார்கள்?

ஒரு திருமணத்திற்குச் சென்ற எனக்கு இரு அனுபவங்கள் ஏற்பட்டது. மணமகன் தாலி கூட கட்டவில்லை, இலை போட்டாயிற்று என்று ஒருவர் சொன்னதுதான் தாமதம். திமுதிமுவென்று ஒரு கூட்டம் அடித்து பிடித்துக் கொண்டு ஓடி இடம் பிடித்தது சாப்பிட. விசாரித்தபோதுதான் அவசரத்திற்கான காரணம் புரிந்தது. திருமணம் முடிந்து அவர்களுக்கு அலுவலகம். பள்ளி செல்ல வேண்டியிருந்ததால் சீக்கிரம் வந்த வேலையை முடித்துக்கொண்டு புறப்படலாமே என்பதுதான்.

நமக்கு அப்படி ஒன்றும் வெட்டி புரட்டும் வேலையில்லாததால் மெதுவாக சாப்பிட செல்லலாமென அமர்ந்து வேடிக்கை (?) பார்த்துக் கொண்டிருந்தேன்.
அடுத்த பந்திக்காக சாப்பிட கூப்பிட வந்தவர்,"சாப்பிடாதவங்க வாங்க! அடுத்த பந்தி ரெடி!" என்று கூறிவிட்டு, எனக்கு தெரிந்தவர் ஆதலால், "வாங்கண்ணே! இலை போட்டாச்சு" என்றார் என்னைப் பார்த்து.

எனக்கு பக்கதில் இருந்தவரும் அவருக்கு தெரிந்தவர் போலிருக்கிறது. அவரையும்,"மாமா எந்திரிங்க, சாப்பிட போகலாம்" என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். நான் எழுந்து அவரையும் கூப்பிட்டு விட்டு அதற்கு அடுத்தாற் போல உட்கார்ந்திருந்த பெரியவரையும், "வாங்க போகலாம்" என்று அழைத்தேன்.

உடனே அவர் "நான் என்ன சாப்பாட்டிற்கு இல்லாமல் இங்கு வந்தேன் என்று நினைத்துக் கொண்டீர்களா?" என்றார் கோபத்தில்.
"என்ன தாத்தா இப்படி பேசறீங்க? சாப்பிட வாங்கன்னுதானே கூப்பிட்டேன்!" என்றேன்.
"நீ கூப்பிட்டா சரியா போச்சா? இங்கே வரிசையிலே நாம மூனுபேரும் உட்கார்ந்திருக்கோம், இப்ப வந்த ஆளு உங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டுவிட்டு, குத்துக் கல்லாட்டம் உட்கார்ந்திருக்கிற என்ன கண்டுகாத மாதிரி போறான். 'வாங்க தாத்தா சாப்பிடலாம்னு' ஒரு வார்த்தை மரியாதைக்கு என்னையும் கூப்பிடமப் போறான் பார்த்தேல்ல." என்றார் வெகு ஆவேசமாக. அவரை சமாதனப் படுத்தி சாப்பிட வைக்க நான் படாத பாடு பட வேண்டி இருந்துது.

இந்தப் பெரியவருக்கே இப்படி கோபம் வருகிறதே! அலுவலக்த்திற்கோ, பள்ளிக்கோ அடித்துப்பிடித்துக் கொண்டு போக வேண்டிய அவசரமில்லாத அந்தக்காலத்தில் பந்திக்கு முந்திக்கொண்டா போய் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள்?


ஒரு வீட்டில் திருமணம், விசேஷம் என்றால் இப்போது வெகுசுலபமாகப் போய் விட்டது. அனைத்திற்கும் ஒப்பந்தக்காரர்கள் உண்டு. ஒரு மண்டபத்தை ஏற்பாடு செய்து விட்டு ஒப்பந்தக்காரரிடம் பணத்தையும் கொடுத்துவிட்டால் கையைக் கட்டிக் கொண்டு கக்கத்தில் பணப் பையை வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தால் போதும். சாப்பாடு, சமையலிலிருந்து Table Cleaning வரை எதெற்கெடுத்தாலும் அதற்கு ஆள் உண்டு. அதுவும் இப்போது இருந்த இடத்திலிருந்தே தொலைப்பேசியை அழுத்தினால் போதும், அனைத்திற்கும் ஆள் ரெடி.

முன்பு அப்படி இல்லை. எவ்வளவு பெரிய விசேஷமாக இருந்தாலும் வீட்டில்தான். திருமணம் என்றால் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமல்ல தெருவில் உள்ள அனைவரும் ஆளுக்கொரு வேலையை எடுத்துக் கொண்டு செய்வார்கள். அப்போதுதான் அந்த விருந்தை சிறப்பாக செய்து முடிக்க முடியும்.

பந்தி ஏற்பாடு செய்யவேண்டுமானால் முதலில் இலை நறுக்கி, இலைப்போட்டு, இருக்கைப் போட்டு SIDE DISH களை பரிமாற வேண்டும். வீட்டில் உள்ளவர்களால் மட்டும் இதை செய்து கொண்டிருக்க
முடியுமா? அதற்கு மற்றவர்கள் முன்னால் சென்று உதவ வேண்டும்.

இந்த 'தானே சென்று உதவும்' பண்பு தேவை என்பதற்குத்தான் "பந்தியிலே முந்தி" இருந்து பரிமாற வேண்டும் என்று கூறப்பட்டிருக்க வேண்டும்.

அது சரி, "படைக்கு பிந்து" என்பதில் வேறு என்ன கருத்து இருக்க முடியும்?
படையெடுப்பு என்றால் வீட்டுக்கு ஒருவரை வாழ்த்தி திலகமிட்டு அனுப்பும் வீர பரம்பரை அல்லவா நம்முடையது. வீரம் என்பது ஆணின் அழகுக்கு இலக்கணமாக கூறிய சமுதயம் அல்லவா? பின் ஏன் படைக்கு பிந்த வேண்டும்?

படைகளில் பல பிரிவு உண்டு. அதில் முன்னர் செல்வது காலாட்படை. அதைத்தொடர்ந்து குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை எனச்செல்லும். முதலில் செல்லும் காலாட்படையில் ஆட்கள் அதிகம். அவர்கள் எதிரியால் தாக்கப்பட்டாலும், பின்னர் வரும் தேர்படைகளில் இருக்கும் வீரர்கள் வெற்றி வாகையினைத் தேடித்தருவார்கள். தேர்படையில் இடம் பெற பல போர்களைக் கண்டு, வீரத்தை நிறுபித்து இருக்க வேண்டும்.
சாதரண வீரர்களுக்கு அதில் இடமில்லை.

நாம் காக்கைக்கு சோறு போட்டு சோதித்து விட்டு சாப்பிடுவதில்லையா?
சாப்பாட்டில் விஷமிருந்தால் தெரிந்து விடும். காக்கையை விட நமது உயிரை மேலாக மதிப்பதினால் தானே அப்படி செய்கிறோம். அது போல வெறும் 'காக்கை வீரர்களாய்', 'வெறும் காலாட்படை' வீரனாக இருந்தால் மட்டும் போதாது, வீரத்தையும் திறமையையும் காண்பித்து பின்னால் வரும் தேர் படைகளில் இடம் பிடிக்க வேண்டும் என்பதை குறிப்பதே "படைக்குப் பிந்து" என்பது.

இதிலிருந்து அந்த பழமொழியின் உண்மையான பொருள், தற்போது நாம் நினைப்பது போல் இருந்திருக்காது என்பது தெரிகிறது அல்லவா!

09.மரக் கோலங்கள்

மரக் கோலங்கள்
மனிதர்களில்தான் உருவத்தில் ஒருவருக்கொருவர் அதிகமாக வித்தியாசப் படுவார்கள். மிருகங்கள் தாவரங்களில் சிறிதளவு வித்தியாசம் தான் காணப்படும் என்றுதான் நினைத்திருந்தேன்.

பாருங்களேன் இந்த மரங்களின் கோலத்தை!

இயற்கை வரைந்த கோலங்கள் இவை.

(பார்த்ததில் பிடித்தவை.வலைகளில் சுட்டவை)









08.எது சைவம்?

எது சைவம்?


(நன்றி: தினகரன் 09-06-2006)

ஆகா வந்திருச்சி! மீனும் சைவத்திற்கு வந்திருச்சி!!.
அப்படி பார்க்காதிங்க! நான் உளறலங்க. நம்ம ம.பி. அமைச்சர் மோதி சொல்லியிருக்காருங்க. ஆமா முட்டையை சைவத்தில சேர்த்தாச்சாமுள்ள. யாரும் சொல்லவே இல்ல!
WAIT பண்ணுங்க, இன்னும் கொஞ்ச நாள்ல நர மாமிசமும் சைவத்துக்கு வந்துடும்.


பொய்யில்லீங்க. அமைச்சர் சொல்லியிருக்கிற காரணத்தப் பாருங்க புரியும். இனப்பெருக்கம் செய்யாத்தினால இறால் சைவம்னா, குழந்தை இல்லாதவங்க கொஞ்சம் பேர் இருக்கங்கள்ள, அவங்களத்தான் சொனேன்.


இனி குஞ்சு பொரிக்காத, குட்டி போடாத, முட்டையிடாத எல்லாத்தையும் சைவமாக்கிட்டாங்கன்னா புண்ணியமாப் போகும்.


செடியல்லாம் விதை மூலம் இன்ப்பெருக்கம் செய்யுதே, அப்படின்னா அதெல்லாம் அசைவமா?


எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம்.

எது சைவம்?

உயிர் இல்லாத பொருள்களா?

அப்படின்னா கீரை,செடி,கொடிக்கெல்லாம் உயிர் இல்லையா?


நண்பர் சொன்னார்,"அவைகளுக்கு வலியை பிரித்தறியும் அறிவு இல்லாததால அவை சைவமாம்.
அப்போ வலி தெரியாததெல்லாம் சைவம்ன்னு வச்சிக்கிட்டா ,செத்துப்போனதெல்லாம் சைவமா?
LOGIG எங்கியோ இடிக்குதே.


பாலை சைவமா ஏத்துகிட்டு இருக்கோம், அதே உடலிலே ஓடும் ரத்தம் அசைவமாகிறது.


யாருக்காவது சைவ, அசைவ உணவுக்கான விளக்கம் தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன். (தமிழ் களஞ்சியத்ல இருக்குதா?)

"ம்.! ஓடு.....! ஓடு.....! முட்டையை கடிச்சு,

இறாலைக் கடிச்சி, நம்மையும் கடிக்க
வந்திடப் போறாங்க."



07. திறமை???

(நன்றி தினமலர் 8/6/2006)




திறமை???

பத்தி எரியுது, பத்தி எரியுது பட்டப் படிப்பினிலே
பாதி இட ஒதுக்கீடு பிரச்சனை,
கத்தி கத்திப் பார்த்து விட்டு மாணவர்கள்
சத்தமின்றி செத்தபின்பும்
மத்தியிலும் மாநிலத்திலும் வைத்தனர்
மீண்டும் வேட்டு, வோட்டுக்காக,
சத்தியமாய் சொல்கிறேன் ஜாதியினி அழியப்போவதில்லை
வீதிப் பெயர்களில் நீக்கிவிட்டாலும்


திறமைக்கில்லை இனி மதிப்பு - குடி
பிறப்பினுக்கே இங்கே சிறப்பு.
மதிப்பெண் பெற்றோருக்கில்லை
மருத்துவ பட்டப் படிப்பு.
ஜாதி சான்றிதழுக்கே செல்லுமிடமெல்லாம் வரவேற்பு

06.மெய்ப் பொருள் காண்பதறிவு - 2


மெய்ப் பொருள் காண்பதறிவு - 2

"களவும் கத்து மற" இந்தப் பழமொழியை பல நேரங்களில் நாம் சொல்லியிருப்போம். ('கற்று' என்பது 'கத்து' என்று பேச்சுவழக்கில் சொல்லப்படுகிறது). முக்கியமாக மாணவர்களிடம், அவன் வேண்டாம் என்று சொல்லும் சப்ஜெக்டை படிக்க வைக்க டானிக்காக இந்த வார்த்தைகளைப் பயன் படுத்துவோம். ( அதே சமயம் அவன் வேண்டாத பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும் போது நாம் தண்டிக்கப் போனால் அவனும் அதே அஸ்திரதைப் பயன் படுத்தி தப்பிக்கவும் பார்க்கலாம்).

நாம் புரிந்து கொண்டிருக்கும் பொருள்,"திருட்டுத் தொழில் இழிவானது, என்றாலும் அதனையும் கற்றுக் கொள்ள வேண்டும், பிறகு மறந்துவிட வேண்டும்" என கற்றுக் கொள்வதின் சிறப்பினை விள்க்கும் பழமொழியாகத்தான்.


களவு இழிவானது என்றுத் தெரிந்தும் ஏன் அதனை கற்க வேண்டும்?

கற்றலைப் பற்றி சொல்ல வந்த வள்ளுவர் "கற்பவை" என்று கற்க வேண்டியதை மட்டும் கற்க என்றார். பின் "நிற்க அதற்கு தக" என்றுதான் கூறினார். மறக்கச் சொல்லவில்லை. அதோடு மட்டுமல்லாமல் "கள்ளாமை" பற்றி ஒரு அதிகாரமே எழுதியுள்ளார்.


என்வே இழிவான, தேவையில்லாத ஒன்றை ஏன் கற்க வேண்டும், பிறகு அதை மறக்க வேண்டும்?


சாதரணமாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று படித்தாலே நாம் எந்த லட்சணத்தில் படிக்கிறோம் என்று தெரியும். இதில் மறந்திட வேண்டும் என்று படித்தால் எப்படி?

எனவே அதன் உண்மைப் பொருள் "களவு அகத்து மற" என்றுதான் இருந்திருக்க வேண்டும். அதாவது களவினை மனதளவில் (அகம்) நினைத்துக் கூடப் பார்க்காதே, மறந்துவிடு என்பதாகும்.

மற்ற கூடா ஒழுக்கங்களான 'கொலை', 'பிறன் மனை நோக்குதல்', 'சூது', 'மது'போன்ற பழிச்சொல் ஏற்பவற்றில் களவும் ஒன்று, அதனையும் மறக்க வேண்டும் என பொருள் படும் படி "களவும் அகத்து மற" என மாறி, பின் காலப்போக்கில் 'அ' மறைந்து தற்போதய வடிவமான "களவும் கத்து மற"என மாறியிருக்கலாம்.

ஒரு காற்புள்ளி இடம் மாறியதனால் பொருள் எதிர் மறையாகி ஒரு உயிரே பறிபோன கதை ஞாபகம் இருக்கிறதல்லவா? மறந்தவர்களுக்காக அக் கதை மீண்டுமிங்கே:


ஆங்கிலேயர் காலத்தில் ஒருவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அவன் மூலம் 'கருணை மனு' அப்போதய வைசிராய்க்கு அனுப்பப்பட்டது. அவரும் 'கருணை மனுவை' பரிசீலித்து மரணதண்டனை வேண்டாமென தீர்மானித்தார். அதனை அப்பொழுதய வழக்கப் படி தந்தி மூலம் "HANG HIM NOT, LEAVE HIM" என்று அடித்து அனுப்பினார்.


எதிர் முனையில் அதனை பெற்று எழுதியவன்,
"HANG HIM, NOT LEAVE HIM" என்று கமாவை மாற்றிப்போட்டு டெலிவரி செய்தார். அந்த அப்பாவி கைதியின் முடிவு என்ன ஆகி இருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா?


எழுத்துக்களின் புணர்ச்சி விதி இல்லாத ஆங்கிலத்திலேயே ஒரு கமா செய்தியை எதிர் மறை ஆக்குமெனில்,தமிழில் கேட்கவா வேண்டும்.


எனவே "களவு அகத்து மற" என்பதே பழமொழியாக இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது அல்லவா.

05. அதிசயம்!!!!!!!

அதிசயம்!!!!!!!
ஆனால் இது
அவசியம்.
இப்படியும் நடக்குமா?

அம்மாவுக்குத் தெரிந்தால்..?

(இந்த செய்தி தினகரனிலிருந்து எடுக்கப்பட்டது)

04.சத்திய சோதனை


சத்திய சோதனை
(வேறு ஒன்றுமில்லை சுயபுராணம்
என்பதினைத்தான் அப்படி முலாம் பூசிச் சொன்னேன். காந்தியடிகளை அவமானப்படுத்து போல உண்ர்ந்தால் அடிக்க வராதீர்கள்,அடிக் கோடிட்டுக் காட்டுங்கள். நானே நடுக்கோடிட்டு அடித்து விடுகிறேன்)

ரேஷன் கார்டில் பதிவுசெய்ய முயன்று கணக்கு எடுக்கும் நேரத்தில் ஊரில் இல்லாததால் விடுபட்டுப் போயிற்று (புதிய கார்டுக்கு நாயாய் அலைந்து கொண்டிருப்பது தனிக்கதை)

பின்னர் வோட்டுப் போடவாவது அடையாள அட்டை வாங்கலாம் என்று இருந்த போது நாடு விட்டாயிற்று. (இனி அடுத்தத் தேர்தல் வரை காத்திருக்க வேண்டியதுதான்)

எனவேதான் வலை ஆரம்பித்த உடனே, மதுமதி அவர்கள் கணக்கு எடுக்கிறார் என்றதும் ஓடி (தவழ்ந்து) வந்து வரிசையில் நிற்கிறேன். (பதிவுக்கான கெடு முடிந்து விட்டதா?)

வலைப்பதிவர் பெயர்:
மதி

வலைப்பூ பெயர் :
எண்ணச்சுவடி (பெயரைப் பார்துவிட்டு ஏதோ பழைய பஞ்ஞாங்கம் என நினைத்து விடப் போகிறீர்கள்)

சுட்டி(url) :
perunthottam.blogspot.com

ஊர்:
சீர்காழியை அடுத்த சிறு கிராமம்-பெருந்தோட்டம். தற்போதய வாசம் மயிலாடுதுறை

நாடு:
இந்தியா. (தற்போது இருப்பது நைஜீரியாவில்)

வலைப்பூ அறிமுகம் செய்தவர்:
கணனிதான், வலையில் உலா வரும் போதுதமிழ்மணம் வலையில் வீழ்ந்தேன். நானும் வலைப்பூவாய் பூத்தேன்

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :
27 மே, 2006

இது எத்தனையாவது பதிவு:
நான்காவது

இப்பதிவின் சுட்டி(url):

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:
(நம்மால் தமிழ் கொஞ்சம் வளரட்டுமே என்றுதான் என்றால் உதைக்க வர மாட்டீர்களா?) நான் கண்ட, கேட்ட,படித்த பல விஷயங்களை பகிர்ந்து கொள்ள/பதிவுசெய்து வைக்க.

சந்தித்த அனுபவங்கள்:
இப்போதுதானே மொட்டு விட்டிருக்கிறேன்.மலர்ந்து மாலையாகும் போதுதானே அனுபவம் அதிகரிக்கும்

பெற்ற நண்பர்கள்:
பல நல்ல உள்ளங்கள்.

கற்றவை:
எல்லாவற்றிலுமே இன்னும் கத்துக்குட்டிதான் (ஒன்றும் உருப்படியாகத் தெரியாது என்பதினை இப்படி நாகரீகமாகச் சொல்லலாம் அல்லவா)

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:
தடையிருக்காது என நம்புகிறேன்

இனி செய்ய நினைப்பவை:
(நாவல்கள், காவியங்கள் எழுதுவது என்றால் நம்பவாப் போகிறீர்கள்) பல விஷயங்களை பகிர்வதை தொடர்வது.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
காவிரி நதிக்கரையில் பிறந்து,வளர்ந்து, பாலாற்றங்கரையிலே (ராணிப்பேட்டை)பிழைப்பு நடத்தி, திரைகடல் ஓடி திரவியம் தேடி,அரபு நாட்டு வெய்யிலில் காய்ந்து,அசர்பைஜான் பனியில் உறைந்து, நைஜீரியாவின் மழையில் நனைந்து கொண்டிருக்கிறேன்.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
வாழ்க தமிழ்! வளர்க நட்பு !

03. மெய்ப்பொருள் காண்பதறிவு - 1



மெய்ப்பொருள் காண்பதறிவு

நாம் அடிக்கடி கேள்விப்பட்ட பழமொழிகள் பல தற்போது நாம் புரிந்து கொண்டிருக்கும் பொருளில் தான் சொல்லப்பட்டதா என்பது எனது நீண்ட நாளைய சந்தேகம்.

மறைந்த தவத்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகளின் பேச்சின் ஒலிப்பதிவை அண்மையில் கேட்க்க நேர்ந்தது. அதில் அவர் ஒரு பழமொழிக்கு புது விளக்கம் தந்திருந்தார். அதன் வழியே யோசித்துப் பார்த்த போது பலவற்றினுக்கு மெய்ப்பொருள் வேறாக இருக்குமெனத் தோன்றுகிறது.

"அரசனை நம்பி புருஷனை கை விட்டது போல" என்ற ஒரு சொல் நம் நாட்டில் வழங்கி வருகிறது.

அதற்கு நேரடியான அர்த்தமாக நாம் புரிந்து கொண்டிருப்பது: ஒரு பெண் தன் கணவனை விட்டு விட்டு ராஜ வாழ்க்கை வாழ அரசனுடன் சென்று பின் அவனால் அந்த புரத்தில் நூற்றோடு ஒன்றாக தள்ளப் பட்ட போது
'அரசனை நம்பி வந்தது எவ்வளவு தவறு' என்பது புரிய வந்தது என்பதாகும்.


எனவே அரசன் என நினைத்து இருக்கும் புருஷனை கைவிட்டு மற்றவரை நம்பிச் செல்ல வேண்டாம் என சொல்ல வந்தது போல் அந்த பழஞ்சொல்லை நாம் வழக்கத்தில் கையாண்டு கொண்டிருக்கிறோம்.


உண்மையில் அதன் அர்த்தம் வேறு என்பது வாரியார் அவர்களின் வாதம். கற்பில் சிறந்த க்ண்ணகி வாழ்ந்த தமிழ் நாட்டில் பெண்களைப் பற்றி இழிவாக அப்படி ஒரு சொல் ஏற்பட்டிருக்குமா?

பின் அதன் உண்மைப் பொருள்தான் என்ன?


முன் காலத்தில் திருமணமாகியும் குழந்தை பிறக்காத பெண்கள் அரச மரத்தைச் சுற்றி வந்தால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை இருந்துவந்தது. ( அது உண்மை என்றும்,அரசு மற்றும் வேப்ப மரக் காற்றில் உள்ள வாயுமூலக்கூறுக்களை பெண்கள் சுவாசிக்கும் போது கர்ப்பப்பையில் உள்ள கிருமிக்கள் இற்ந்து, கர்ப்பப்பை சுத்தமாகிறது என்பதும் தற்போது அறிவியல் கூறுகிறதாமே!) 'அரச மரத்தை சுற்றி விட்டு அடி வயிற்றைப் பார்த்தது போல' என்று அவசரப்படும் ஜென்மங்களுக்குச் சொல்லப்படும் எடுத்துக்காட்டிலிருந்தும் அரச மர நம்பிக்கையை அறியலாம்.


எனவே குழந்தைப் பேறு வேண்டி ராத்திரிப்பகலாக அரசமரத்தடியிலேயே தவம் கிடக்க ஆரம்பித்து விட்டனர் அக்காலப் பெண்கள். வீட்டில் கணவன் என்று ஒருவன் இருக்கிறான்,அவனது துணையும் இதற்கு அவசியம் என்பதினையும் மறந்து விட்டனர். அவர்களது நம்பிக்கை நடைமுறைக்கு உதவாதல்லவா? இதனைக் குறிக்கவே "அரசை (அரச மரத்தை) நம்பி" என்று இருந்திருக்க வேண்டியச் சொல்"அரசனை நம்பி" என்று மாறி(மருவி)யிருக்க வேண்டும்.

எனவே இனி இப்பழ மொழியை " அரசை நம்பி புருஷனை கை விட்டது போல" என்றே கூறுவோம்.

02.படித்ததில் பிடித்தவை



படித்ததில் பிடித்தவை

புதுக்கவிதைகள்

லஞ்சம்
வாங்கினேன்! பிடித்து விட்டார்கள்
கொடுத்தேன்! விட்டுவிட்டார்கள்.

வாழ்க்கை
சலவைச் சட்டைக்குள்
சல்லடை பனியன்.

தோல்வி
விதைக்கும் நேரத்தில் தூங்கியவன் நீ!
அறுவடை நேரத்தில் ஏன் அழுகிறாய்?

பதவி
எங்கள் ஊரில் ஒருவர்
ஊராட்சி மன்ற தலைவரானார்,
சட்ட மன்ற உறுப்பினரானார்,
அமைச்சரானார், அயல் நாட்டுத் தூதுவரானார்,
இறுதிவரை
மனிதனாகாமலே மரணமானார்.

கோலம்
கருப்பு வளையல் கையுடன்
ஒருத்தி
வளைந்து, நெளிந்துப்
பெருக்கிப்போனாள்,
வாசல் சுத்தமாச்சு.
மனம் குப்பையாச்சு.

கேட்டவை

ஜீரணமகாத உணவு வயிற்றைக் கெடுக்கும்
ஜீரணமகாத படிப்பு மூளையைக் கெடுக்கும்

கல்லூரி விழாவில் மாணவர் ஒருவர் பேசியது:

"We are not useless;
But we are used less"

(குறிப்பு: என்ன எல்லாம் சுட்டச்சரக்குதானா? சொந்த சரக்கை ஒன்றையும் காணோமே? என்று கேட்பது புரிகிறது. என்னதான் ஆறு, குளம், குட்டைகளில் நீந்தியிருந்தாலும், கடலில் நீந்தப் போகும்போது மற்றவரின் கைபிடித்து முதலில் இறங்குவதுதானே பாதுகாப்பானது, அதுதான் முதலில் "வந்த: சரக்கே இங்கே!)

01.அரிச்சுவடி


வணக்கம்.

இது என் முதல் பதிவு.

"கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானுமதுவாக பாவித்து"என்பது போல கணனியில் கரை கண்டோர் வலையில் விதைப்பது கண்டு, மேய்ந்து கொண்டிருந்த நானும் சிந்தனைகளைத் தூவ வந்துள்ளேன்.

வந்தாரை வலை வீசி விதைக்க வைக்கும் "தமிழ்மணம்" வலை அமைப்பு மையத்திற்கும், தமிழில் எழுதவைத்துக் கொண்டிருக்கும் திரு சுரதாவின் எழுத்துரு மாற்றிக்கும் நன்றியுடன் கால் பதிக்கின்றேன்.

Related Posts with Thumbnails